முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
186

1

1‘நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒரு வார்த்தை சொல்லுமாகில், நீர் தேடிப் போகிற சரக்குதான் நமக்கு என்ன செய்ய?’ என்றாரே அன்றோ?

    2‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்; ‘இவன் புகுராவிடில் நாம் உளோம்ஆகோம்,’ என்கிறார் பெருமாள்; ‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க, ‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது, ‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்; ‘ராகவம் சரணம் கத:’ என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி. ‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ 3‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட - வானரங்களுக்குத் தலைவனே! இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக்கொள்ள வேண்டிற்று?

    4‘இப்படி அவன் இருக்கைக்கு அடி என்?’ என்னில், அதனை அருளிச்செய்கிறார் மேல் : ஞாலத்தார் தமக்கும்

_____________________________________________________

1. ‘இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளிடத்தில்
  அன்பு செலுத்தியிருப்பது,’ என்பதற்குப் பிரமாணங் காட்டுகிறார், ‘நீர்
  மஹாராஜரான தரம் குலைய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத். 41 :4.
 
‘நீர் தேடிப்போகிற சரக்கு’ என்றது, சீதாபிராட்டியை.
  இச்சுலோகப்பொருளோடு,

  ‘இந்நிலை விரைவின் எய்தா தித்துணை தாழ்த்தி யாயின்
  நன்னுதற் சீதை யாலென்? ஞாலத்தாற் பயனென்? நம்பி!
  உன்னையான் தொடர்வன்; என்னைத் தொடருமிவ் வுலக மெல்லாம்;
  பின்னைஎன்? இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.’

  என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

2. மேலதற்கே ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘ஸ்ரீ விபீஷணாழ்வானை’ என்று
  தொடங்கி.

3. ‘ஆதலால் அபய மென்ற பொழுதத்தே யபய தானம்
   ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த
   காதலால்; இனிவேறு எண்ணக் கடவதென்? கதிரோன் மைந்த!
   கோதிலா தவனை நீயே என்வயிற் கொணர்தி என்றான்.’

  என்றார் கம்பநாடரும்.

4.  ‘இப்படி அவன் இருக்கைக்கு அடி என் என்னில்,’ என்றது, ‘முற்பட இவர்
  பக்கலிலே அன்புடையனாயிருத்தற்குக் காரணம் என்?’ என்னுதல்.
  அன்றிக்கே, ‘சமுசாரிகளுக்கும் இவ்வருகான நம்மிடத்திலும், ரூப
  குணங்களாலும் ஆத்தும குணங்களாலும் நிறைந்திருக்கிற பிராட்டியிடத்திலும்
  அன்பு ஒத்திருக்கைக்குக் காரணம் என்?’ என்னுதல். ‘நமக்கும் பூவின்மிசை
  நங்கைக்குமின்பன்’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘இப்படி’ என்கிறார்.