முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
188

New Page 1

‘ஆழ்வீர்! நம்மை ஒரு கவி சொல்லும்,’ என்றால், அப்போதே கவி சொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு,’ என்கிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி. அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே, சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை; அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி, ‘நீர் ஒரு கவி சொல்லும்,’ என்றால் ‘பிரீதியாலே உடை குலைப்படாமல் தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்று அருளிச்செய்வர்.

    இனி யாவர் நிகர் அகல் வானத்தே - பரமபதத்திலே தரித்து நின்று, 1‘அஹமந்நம் அஹமந்நம் - நான் பரமாத்துமாவுக்கு இனியன், நான் பரமாத்துமாவுக்கு இனியன்’ என்னுமவர்கள் எனக்கு என் கொண்டார்? திரிபாத் விபூதியாய்ப் பரப்பையுடைத்தாமத்தனையோ வேண்டுவது? தெளிவிசும்பு ஆகையாலே அந்நிலந்தானே சொல்லுவிக்கும்; இருள் தருமாஞாலமாகையாலே இந்நிலம் அதனைத் தவிர்ப்பிக்கும்; 2‘சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்’ என்னக் கடவதன்றோ?                                       

(8)

385

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்திசை யும்தவி ராதுநின் றான்தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்குஇனி மாறுஉண்டோ?

    பொ-ரை : ‘சுவர்க்க லோகத்திலும் அதற்குள்ளே மேலேயிருக்கின்ற பிரமலோகம் முதலான உலகங்களிலும் பூலோகத்திலும் பூமியின் கீழேயிருக்கின்ற பாதாளலோகத்திலும் எட்டுத் திக்குகளிலும் நீங்காது பரந்து நிற்கின்றவனும், வளைந்த சிறந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பெரிய கையிலே உடையவனும், குடக்கூத்தாடியவனும்,

_____________________________________________________

1. தைத்திரீய உபநி. பிரு. 10. என்னுமவர்கள் - நித்தியசூரிகள்.
  ‘என்கொண்டார்?’ என்றது, ‘எப்படி ஒப்பாவார்?’ என்றபடி. திரிபாத் விபூதி -
  பரமபதம்.

2. திருவிருத்தம், 79.