முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
191

1

    1‘அஞ்சலி செய்தவராய் வணக்கத்துடன் இருக்கின்ற’ என்கிற இளைய பெருமாளைப் போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சியாலே சரீரத்தை வளைத்துக்கொண்டிருப்பவன் ஆதலின், ‘கூனல் சங்கம்’ என்கிறது.  என்றது, 2‘வாயது கையதுவாக அனுபவிக்கின்றவன் அன்றோ?’ என்றபடி. லீலா விபூதியும் நித்திய விபூதியுமாகிய இரு வகைப்பட்ட உலகங்களும் வந்து ஒதுங்கினாலும், பின்னையும் கையே விஞ்சி இருக்குமாதலின் ‘தடக்கை’ என்கிறது. குடமாடியை - எங்கும் ஒரே தன்மையாய்ப் பரந்து நின்றாற்போலே, ஓர் ஊராகக் காணும்படி குடக்கூத்து ஆடினபடி. குடக்கூத்தினைக் கூறியது, எல்லாச் செயல்களுக்கும் உபலக்ஷணம் வானம் கோனை - 3ஓர் ஊர் அளவன்றிக்கே ஒரு நாட்டுக்காகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறபடி. கவி சொல்ல வல்லேற்கு - இப்படி இருக்கிறவனை எங்கும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு. இனி மாறு உண்டே - ‘அகல்வானம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டுமோ? 4‘நித்திய விபூதி லீலா விபூதிகளாகிற இரு வகைப்பட்ட உலகங்களிலும் எதிர் இல்லை’ என்கிறார்.

(9)

386

உண்டும்உமிழ்ந் தும்கடந்தும் இடந்தும்கிடந் தும்நின்றும்
கொண்டகோ லத்தொடு வீற்றிருந் தும்மணம் கூடியும்
கண்டஆற் றால்தனதே உலகுஎன நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.

_________________________________________________

1. ஸ்ரீராமா. அயோத். 4 : 42.  

2. ‘பாஞ்சஜன்யத்திற்கு பகவத் அநுபவம் உண்டோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘வாயது கையதுவாக’ என்று தொடங்கி. இது,

  ‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்;
  கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே;
  பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்;
  பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே!’

  என்ற நாய்ச்சியார் திருமொழிப் பாசுரத்தை அடியாகக்கொண்டு எழுந்தது.
  ‘வாயது கையது’ என்பது, சிலேடை.

3. ஓர் ஊர் - திருவாய்ப்பாடி. ஒரு நாடு - பரமபதம்.

4. ‘மாறுண்டே?’ என்று பொதுவாக அருளிச்செய்வதனால், நித்திய விபூதி லீலா
  விபூதிகளாகிற இரண்டு உலகங்களிலும் என்கிறார்.