முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
204

அம

அம்தண் அம்துழாய் கொண்டு சூட்டுமினே,’ என்றும், ‘தண் அம் துழாய்த் தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே,’ என்றுமே அன்றோ முன்பும் விதித்தது? 1அங்கு ‘நின்ற மண்ணாயினும்’ என்றாள்; இங்கு, ‘மாயன் தமர்அடி நீறு’ என்றாள்’ இதுவே அன்றோ அடிபடச் செய்து போந்த பரிஹாரம்? 2ஆயிட்டு, இவள் நோய் இது; நோய்க்கு நிதானமும் இது; இதற்குப் பரிஹாரமும், பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுதலும் பாகவதர்களுடைய பாததூளியைச் சேர்ப்பிக்கையும்,’ என்று சொல்லி அவர்கள் செய்கிறவற்றை நீக்குவிக்கிறாளாய்ச் செல்லுகிறது.

    3‘இதுதன்னில் ஓடுகிறது என்?’ என்னில், அறிவு அற்று இருக்கும் நிலையிலும் வேறு தேவதைகளுடைய சம்பந்தமும் அத்தேவதைகளுக்கு அடிமைப்பட்ட அடியார்களுடைய சம்பந்தமும் அவ்வப்பொருள்களினுடைய தன்மையால் பாதகமுமாய், பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுதலும் பாகவதர்களுடைய சேர்க்கையும் பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படி ஆழ்வார்க்கு வைஷ்ணவத்தின் தன்மை முறுகினபடி சொல்லுகிறது. 4‘இராவணன் மாயா சிரசைக் காட்டின போது பிராட்டியும் மற்றைப் பெண்களைப் போன்று சோகித்துக் கண்ணநீர் விழவிட்டாளாய் இருந்தது; 5இதற்கு அடி என்? இது கேட்ட போதே முடிய அன்றோ தக்கது?’ என்று சீயரைக் கேட்க, ‘அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே ‘மெய்’ என்றே சோகித்தாள்; ஞானம் இன்றியிலே பிழைத்திருப்பதற்குக் காரணம் அவருடைய உளதாம் தன்மையாகையாலே உளளாயிருந்தாள்; இவ்வர்த்தம் மெய்யாகில் உளளாம் தன்மையும் இல்லையாம்,’ என்று அருளிச்செய்தார்.

_____________________________________________________

1. ‘அங்கு’ என்றது, திருவிருத்தத்தைக் குறித்தபடி : ‘இங்கு’ என்றது,
  ‘தீர்ப்பாரை’ என்னும் இத்திருவாய்மொழியைக் குறித்தபடி.

2. ஆயிட்டு - ஆன பின்னர். ‘தேர்ப்பாகனார்க்கு’ என்கையாலே, நோயும்
  அதற்கு நிதானமும் கொள்க.

3. ‘இதுதன்னில்’ என்று தொடங்கி, இத்திருவாய்மொழிக்குச்
  சுவாபதேசப்பொருள் அருளிச்செய்கிறார்.

4. ‘அஞ்ஞான தசையிலும் பொருள்களின் தன்மையால் தாரகம் என்பதற்குச்
  சம்வாதம் காட்டுகிறார், ‘இராவணன்’ என்று தொடங்கி.

5. ‘இதற்கு அடி என்?’ என்றது, ‘கண்ணநீர் விழவிட்டிருந்த மாத்திரத்திற்குக்
  காரணம் என்?’ என்றபடி. சீயர் - நஞ்சீயர். ‘ஞானம் இன்றியிலே’ என்றது,
  ‘பெருமாள் உயிரோடே இருக்கிறார்’ என்கிற ஞானமின்றியே’ என்றபடி.
  ‘இவ்வர்த்தம்’ என்றது, அவர் முடிவினை. இங்கு,

  ‘காத லாள்உடல் உள்ளுயிர் கைவிடின்
  ஏதம் என்னுயிர் எய்தி இறக்கும்மற்று
  ஆத லால்அழிவு ஒன்றிலள்; அல்லதூஉம்
  மாதர் விஞ்சையும் வல்லளு மல்லளோ?’

  என்ற சிந்தாமணிச் செய்யுளின் (1631) முதல் மூன்றடிகளையும், ‘யாம்
  இருதலைப்புள்ளின் ஓருயிரேமாதலின், காதலாள் உயிர் நீங்கின் என்னுயிரும்
  ஏதம் எய்தி நீங்கும்; இது நீங்காமையின், அவளும் இறந்து பட்டிலள்;
  இதுவும் அறிதற்கு ஓர் உபாயம்,’ என்ற உரையையும் ஒப்பு நோக்குக.