முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
26

        வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்என்
            பதுஇல்லை ; நிற்குறில்
        ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல்
            அடியவர் ஆமினோ.

    பொ-ரை : ‘வாழ்ந்திருந்தவர்கள் வாழ்ந்தது பெரிய மழை நீரிலே தோன்றுகிற குமிழி போன்று அழிந்து நரகத்திலே விழுந்து அழுந்தினார்கள் என்பதே; அது அல்லாமல், அன்று முதல் இன்று வரையிலும் வாழ்ந்தவர்கள் ஒரே தன்மையாக வாழ்ந்தே இருந்தார்கள் என்பது இல்லை; ஆதலால், நிலை பெற்ற பேற்றினைப் பெறவேண்டும் என்று இருந்தீர்களாகில், ஆழ்ந்து நிறைந்திருக்கின்ற கடலைப் படுக்கையாகவுடைய இறைவனுக்கு அடியவர் ஆகுங்கோள்,’ என்கிறார்.

    வி-கு : ‘வாழ்ந்தது மொக்குளின் மாய்ந்துமாய்ந்து ஆழ்ந்தார் என்பதே; அது அல்லால், வாழ்ந்தே நிற்பர் என்பது அன்று முதல் இன்று அறுதியா இல்லை ; ஆதலால், நிற்குறில், அண்ணல் அடியவர் ஆமின்,’ என்க. ‘நிற்குறில்’ என்பது, நிற்க உறில் என்பதன் விகாரம்.

    ஈடு : ஆறாம் பாட்டு. 2‘மருத்துவர்கள் பிழைத்தாரை எண்ணுமாறு போன்று இறந்தவர்களை எண்ணுகிறது என்? வாழ்ந்தவர்களும் சிலர் இலரோ?’ என்ன, ‘அது இருந்தபடி கேட்கலாகாதோ பின்னை?’ என்கிறார்.

    வாழ்ந்தார்கள் வாழ்ந்தது - வாழ்ந்தாராய் இருக்கிறவர்கள் வாழ்ந்தது எல்லாம். 3அவர்கள் வாழ்ந்தார்களாக நினைத்திருக்கிறார்கள்; இவர் ‘கேடு’ என்று இருக்கிறார். அவர்கள் வாழ்வாக நினைத்திருக்கிற இதனை அன்றோ,

_____________________________________________________

1. ‘படுமழை மொக்குளின் பல்காலுந் தோன்றிக்
  கெடுமிதோர் யாக்கையென் றெண்ணி’

  என்பது நாலடியார்.

2. ‘அன்று முதல் இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்
  என்பதில்லை,’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

3. ‘வாழ்ந்தார்கள்’ என்று தம்மோடு சம்பந்தம் அறச் சொல்லுதற்குக் காரணம்
  அருளிச்செய்கிறார், ‘அவர்கள் வாழ்ந்தார்களாக’ என்று தொடங்கி.
  ‘அவர்கள் வாழ்வாக நினைத்திருந்ததை இவர் கேடு என்று
  நினைத்திருப்பாரோ?’ என்னும் வினாவிற்கு விடையாக, ‘அவர்கள் வாழ்வாக’
  என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.