முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
260

அன

அன்றோ சாஸ்திரம் சொல்லுகிறது? 1சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப்போலே, வேட்டார்க்கு உதவாத தண்ணீர் ஆவதே! 2‘மரகத மணித்தடம்’ என்னப்படுமவன் அன்றோ அவன்?

    காண - கருமுகை மாலை தேடுவார், சூட அன்றிக்கே, சும்மாட்டைக் கொள்ளத் தேடுவர்களோ? 3கிட்டினாலும் ‘ஸதா பஸ்யந்தி - எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்’ என்பதே அன்றோ? 4‘காரார் திருமேனி காணுமளவு’மே அன்றோ இங்கும்? ‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’ இத்தனையே அன்றோ? ‘என் கணவனைப் புண்ணியம் செய்த மகா புருஷர்கள் பார்க்கிறார்கள்,’ என்கிறபடியே, நாடாகக் கொள்ளை கொள்ளாநின்றது கண்டீர் என்றாளே அன்றோ பிராட்டியும்? வாராய் - வருகின்றிலை; 5வாராயேயானால், வளைக்க ஒண்ணாதே அன்றோ? ‘காண’ என்றதனால் பலம் சொல்லிற்று; ‘வாராய்’ என்றதனால் உபாயம் சொல்லுகிறது. 6அவ்வடிவைக் காணும்போது என்றும் அத்தலையாலே வரப்பெற இருக்கை போலேகாணும் முறை. ‘நீ முறை செய்யப் பார்த்திலையேயாகிலும், என் துன்பம் தீரும் அத்தனையே எனக்கு வேண்டுவது,’ என்கிறார். கூவியும் கொள்ளாயே - முறை கெட அழைத்தாகிலும் கொள்ளுகின்றிலை.

_____________________________________________________

1. ‘வாராய்’ என்ற துன்பமிகுதியினாலே பலித்த கருத்தை அருளிச்செய்கிறார்,
  ‘சேர்ந்து’ என்று தொடங்கி.

2. ‘அவன் தண்ணீர் ஆவனோ?’ என்ன, ‘ஆவன்’ என்பதற்குப்
  பிரமாணங்காட்டுகிறார், ‘மரகதமணி’ என்று தொடங்கி. இது, திருவாய்.10.1:8.

3 ‘காண்கையே பிரயோஜனமாக இருக்குமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘கிட்டினாலும்’ என்று தொடங்கி.

4. ‘பரமபதத்திலே சதாபஸ்யந்தியானாலும், இங்கு வேறேயும் சில இல்லையோ?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘காரார் திருமேனி’ என்று
  தொடங்கி. இது, சிறிய திருமடல், 69. ‘அழைப்பன்’ என்ற பகுதியையுடைய
  பாசுரம், நான்முகன் திரு. 39. ‘என் கணவனை’ என்று தொடங்கும்
  பொருளையுடைய சுலோகம், ஸ்ரீராமா. சுந். 25 : 16.

5. ‘இப்படிச் சொல்லுவான் என்? வரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தால்
  என்னை?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘வாராயேயானால்’
  என்று தொடங்கி.

6. ‘வருகின்றிலை என்பது என்? தாமே செல்ல ஒண்ணாதோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘அவ்வடிவை’ என்று தொடங்கி. ‘முறை’ என்றது,
  அவன் தானே வந்து முகங்காட்டுதலை.