முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
268

402

402

    காண வந்து,என் கண்மு கப்பே தாமரைக் கண்பிறழ,
    ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்றுஅருளாய் என்றுஎன்று,
    நாணம் இல்லாச் சிறுதகையேன் நான்இங்கு அலற்றுவதுஎன்
    பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?

    பொ-ரை : ‘பிரமன் முதலான தேவர்கள் விரும்பியும் காண முடியாத பெருமை பொருந்திய சுவாமியை, ஓட்டு அற்ற ஆணிச் செம்பொன் போன்ற திருமேனியையுடைய எந்தையே! உன் தாமரை போன்ற கண்கள் விளங்கும்படியாக, நான் காணும்படி வந்து என் கண்களின் முன்னே நிற்கவேண்டும் என்று என்று வெட்கம் இல்லாத சிறுதகையேனாகிய நான், இந்த உலகத்திலே இருந்துகொண்டு அலற்றுவதனால் என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

    வி-கு : ‘வானோர் பேணிக் காணமாட்டாத பீடுடை அப்பனை, ‘எந்தையே! நின் தாமரைக்கண் பிறழக் காண வந்து கண்முகப்பே நின்றருளாய்’ என்று என்று சிறுதகையேன் இங்கு அலற்றுவது என்?’ எனக் கூட்டுக. ‘பிறழ நின்றருளாய்’ என்றும், ‘காண வந்து நின்றருளாய்’ என்றும் தனித்தனியே கூட்டுக. ஆணி - மாற்றுயர்ந்த பொன்.

    ஈடு : நான்காம் பாட்டு. 1‘தாம் காணும்படியாக வரவேண்டும் என்றார்; இவ்வுலக சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகள் அனுபவிக்கும் வடிவை, பிரமன் சிவன் முதலானோர்களும் காணமாட்டாததை நான் காணவேண்டும் என்று ஆசைப்படுகிற இதனால் என்ன பிரயோஜனம் உண்டு? இதற்குக் காரணம், என்னுடைய நாணம் இன்மையும் ஞானம் இன்மையுமே அன்றோ?’ என்கிறார்.

    காண வந்து ‘மானச அனுபவம் மாத்திரம் அன்றிக்கே, கண்களாலே, காணும்படிக்குத் தகுதியாக வந்து’ என்னுதல்; அன்றிக்கே, ‘புறப்படுதல் தொடங்கி நான் கண்டு அனுபவிக்கும்படிக்குத் தகுதியாய் வந்து’ என்னுதல். ‘ஆணிச்செம்பொன் மேனி எந்தாய்! என் கண்முகப்பே நின்றருளாய்,’ என்பார் ஆயிற்று. 2‘மற்று

_____________________________________________________

1. ‘பேணி வானோர் காணமாட்டாப் பீடுடை அப்பனை, நாணமில்லாச்
  சிறுதகையேன் நான் இங்கு அலற்றுவது என்?’ என்பதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. உலகிலேயுள்ள ஆணிப்பொன்னையும் ‘மற்று ஒப்பாரையில்லா ஆணி’ என்று
  சொல்லப்படுகிற சர்வேசுவரனாகிற இவ் வாணியையும் இட்டு உரைத்துப்
  பார்த்தவாறே, ‘சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது’
  என்கிறபடியே, உலகிலேயுள்ள அந்த ஆணியும் மழுங்கிக் காட்டிற்று;
  ஆகையாலே, ‘செம்பொன்’ என்று அடை கொடுத்து ஓதுகிறார் என்பது.
  ‘என்றதுவும்’ என்றது, ‘இப்படிச் சுட்டு உரைத்த நன்பொன்னும்’ என்றபடி.
  ஆணிப்பொன் - அதிகமாற்றுடைய பொன்.  ‘மற்றொப்பாரை’ என்னும்
  இத்திருப்பாசுரம், திருவிருத்தம், 85.