முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
271

403

403   

அப்ப னே!அடல் ஆழி யானே!
    ஆழ்கட லைக்கடைந்த
துப்ப னே!‘உன் தோள்கள் நான்கும்
    கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு,
    ஆவி துவர்ந்துதுவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று
    ஏழையேன் நோக்குவனே.

    பொ-ரை : ‘எந்தையே! வலிமை பொருந்திய சக்கரத்தை உடையவனே! ஆழ்ந்துள்ள திருப்பாற்கடலைக் கடைந்த வலிமையை உடையவனே! ‘உன்னுடைய தோள்கள் நான்கனையும் கண்டதாய் விடக்கூடுமோ?’ என்று, எப்பொழுதும் கண்ணும் கண்ணீருமாய் நின்று என் உயிரும் பசையற உலர, இந்தக் கணத்திலேயே வரவேண்டும் என்று விரும்பி, அறிவில்லாத யான், நீ வரக்கூடிய திசையைப் பார்ப்பேன்,’ என்றவாறு.

    வி-கு: ‘கூடுங்கொல் என்று கண்ணநீர் கொண்டு துவர்ந்து துவர்ந்து நோக்குவன்’, என்க. ஏழையேன் - அறிவில்லாதவனான யான்; சபலனான நான்.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘பிரமன் சிவன் முதலானோர்கட்கும் காண முடியாதிருக்கிற உன்னுடைய வடிவழகைக் காணவேண்டும் என்று ஆசைப்படாநின்றேன்; என் ஆசை இருந்தபடி என்?’ என்கிறார்.

    அப்பனே - 2நீ முகங்காட்டாத போதும் நான் உன்னையே சொல்லிக் கூப்பிடும்படி எனக்கு இவ்வளவான பெரிய உபகாரத்தைச் செய்தவனே! அடல் ஆழியானே - மிடுக்கையுடைய சக்கரத்தை உடையவனே! அன்றிக்கே, ‘எப்போதும் ஒக்கப் போர் செய்தற்கு ஆயத்தமாக இருப்பவனும், 3விரோதிகளை அழிக்கக்கூடியவனும், என் தடைகளைப்

_____________________________________________________

1. ‘மேல் பாசுரத்தில் வந்துள்ள ‘வானோர் காணமாட்டா’ என்றதனைக்
  கடாக்ஷித்து, இப்பாசுரத்தில் ‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்
  என்று ஏழையேன் நோக்குவன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘பிரிந்து நோவுபடாநிற்க, ‘அப்பனே’ என்கிறது என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘நீ’ என்று தொடங்கி.

3. ‘அடல்’ என்றதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘விரோதிகளை’
  என்று தொடங்கி.