முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
28

New Page 1

கொடுத்ததாக நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.

(6)

339

ஆமின் சுவைஅவை ஆறோடு அடிசில்உண்டு ஆர்ந்தபின்
தூமென் மொழிமட வார்இரக் கப்பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.

    பொ-ரை : ‘பொருந்திய இனிய அந்த அறுசுவையோடு கூடின உணவை உண்டு வயிறு நிறைந்த பின், தூய்மை பொருந்திய மெல்லிய சொற்களைப் பேசுகின்ற பெண்கள் இரந்து கூறப் பின்னரும் உண்பார்கள் ; அவ்வாறு உண்டவர்கள், அந்நிலை கெட்டு, ‘எமக்கு ஒரு பிடி அன்னம் கொடுமின்,’ என்று தட்டித் திரிவார்கள் ; ஆதலின், திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய ஆதி அம் சோதியான இறைவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

    வி-கு : ‘ஆம் இன் அவை ஆறு சுவையோடு அடிசில் உண்டு’ எனப் பிரித்துக்கூட்டுக. தூ - பரிசுத்தம். துற்றல் - உண்டல். துற்றுவர் - பெயர். ‘துற்றுவர் இடறுவர்’ என முடிக்க. இடறுவர் - முற்று. கோமின் - தொகுத்துச் சொல்லுமின். ‘குணங்கள் கோமின்’ என மாறுக.

    ஈடு :  ஏழாம் பாட்டு. 1‘ஐஸ்வர்யத்துக்கு நீர் சொல்லுகிற குற்றம் உண்டே ஆகிலும், சோறு முதலானவைகட்கு, தரித்திருப்பதற்குக் காரணமுமாய் இனியவையுமாய் இருக்கிற தன்மை உண்டே?’ என்ன, ‘அவையும் நிலை நில்லா,’ என்கிறார்.

    ஆம் இன் சுவை - ஆன இனிய சுவை ; நன்றான நல்ல சுவை. அவை ஆறோடு - ‘அறுசுவை’ என்று பிரசித்தமானவற்றோடே கூட. அடிசில் உண்டு -2முன்பு இரந்து உண்டு

_____________________________________________________

1. ‘அடிசில் உண்டு ஆர்ந்த பின், ‘ஈமின் எமக்கு ஒரு துற்று’ என்று இடறுவர்’
  என்பதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘முதலானவைகள்’ என்றதனால், தண்ணீர் காய்கறிகள் முதலானவற்றைக்
  கொள்க.

2. ‘சோறு உண்டு’ என்னாது, ‘அடிசில் உண்டு’ என்பதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘முன்பு இரந்து உண்டு திரிந்தவன்’ என்று தொடங்கி.
  ‘அடிசில் என்பது, உண்பன தின்பன பருகுவன நக்குவன என்னும்
  நால்வகைகளுக்கும் பொது’ என்றும், ‘ஊன் துவை கறி சோறு உண்டு
  வருந்து தொழிலல்லது’ என்புழி உண்டென்பது, ஒன்றற்கேயுரிய
  வினையாதலின் வழுவாம் பிறவெனின், உண்டல் என்பது உண்பன தின்பன
  எனப் பிரித்துக் கூறும் வழிச் சிறப்பு வினையாம்; பசிப்பிணி தீர நுகரப்படும்
  பொருளெல்லாம் உணவெனப்படுமாகலின், பொது வினையுமாம்; அதனான்,
  அது வழுவன்றென்பது,’ என்று சேனாவரையர் கூறுவர். (தொல். சொல். 46
   - 47.)