முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
282

என

என்றபடி. வண் துழாயின் கண்ணி வேந்தே - ‘இவ்வுலகத்துக்குள்ளே காட்டுமிடத்தில், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்குமாறு போலே காட்டவும் வேண்டும். நித்தியசூரிகளுக்குக் காட்சி கொடுக்கும் ஒப்பனையோடே காட்டவும் வேண்டும்,’ என்பார், ‘துழாயின் கண்ணி வேந்தே’ என்கிறார். வந்திடகில்லாயே வந்திடுகின்றிலை. இதனால் ‘கூவியுங்கொள்ளாயே’ என்றது பற்றாது என்கிறார். இது நான் பெறாத அமிசம்.

    ‘இவைதாம் இருந்தபடி என்? இந்தச் சரீர சம்பந்தம் அற்றமையும் இல்லை; கைங்கரியம் பெற்றமையும் இல்லை; இங்ஙனம் இருக்க, ‘இவ்வமிசம் பெற்றேன், இவ்வமிசம் பெற்றிலேன்’ என்கிறபடி என்?’ என்னில், 1ஒன்று குறிக்கோளாய், மற்றையது அதற்கு உறுப்பாய் வருவதே அன்றோ? இவர்தாம் முதலிலே ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றார்; அவனும் அளவிலா ஆற்றலையுடையவனாய் இருந்தான். ஆதலால், ‘இது கழிந்ததே அன்றோ?’ என்று அதனைப் பெற்றாராக நினைத்திருந்தார்; கைங்கரியம் அவசியம் பெற்றல்லது நிற்க ஒண்ணாமையாலே, ‘அது கைபுகுராமையைப் பற்றப் பெற்றிலேன்,’ என்கிறார்.

(8)

407

இடகி லேன்ஒன்று; அட்ட கில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவ னாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல்நெஞ்சம் காதல்கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவு கின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?

    பொ-ரை : ‘பசியுடையார்க்கு ஒரு பிடிச்சோற்றை இட்டேன் அல்லேன்; தாகமுடையார்க்கு ஒரு மிடறு தண்ணீர் வார்த்தேன் அல்லேன்; ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன்; கடமையையுடையவனாய் அவ்வக்காலங்களில் பூக்களைப் பறித்துத் துதித்தேன் அல்லேன்; மடமையையும் வலிமையையுமுடைய மனத்திலே காதல் மிக, கொடிய வினையையுடைய யான் அறிவின்மையால் சக்கரத்தையுடைய தலைவனைக் காண வேணும் என்று தடவுகின்றேன்; எங்கே காணக்கடவேன்?’ என்கிறார்.

_____________________________________________________

1. ஒன்று, கைங்கரியம் மற்றையது, சரீர சம்பந்த நீக்கம்.