முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
291

நடுவே; பிரிகிறது பெருமாளை; இவற்றால், என்ன பிரயோஜனம் உண்டு?’ என்றபடி.

410

ஏறுஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறுஆளும் தனிஉடம்பன், குலம்குலமா அசுரர்களை
நீறுஆகும் படியாக நிருமித்து, படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை 1குறைஇலமே.

    பொ-ரை : ‘இடபவாகனத்தையுடைய சிவபிரானும் நான்கு முகங்களையுடைய பிரமனும் திருமகளும் தனித்தனியே ஆளுகின்ற ஒப்பற்ற திருமேனியையுடையவனும், கூட்டம் கூட்டமாக அசுரர்கள் சாம்பலாகும்படியாக நினைத்துப் படையைப் பிரயோகித்த மாறாளனுமான சர்வேசுவரனால் விரும்பப்படாத அழகிய இந்நிறத்தால் ஒருவிதப் பயனும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : குறை - பயன். இத்திருவாய்மொழி, தரவுகொச்சகக் கலிப்பா.

    ஈடு : முதற்பாட்டு. 2‘எல்லை இல்லாத பெருமை பொருந்திய குணத்தையுடையவனுமாய் விரோதிகளை அழிக்கிற ஆற்றலையுடையவனுமாய் இருக்கிற எம்பெருமான் விரும்பாத நலம் மிக்க நிறங்கொண்டு எனக்கு ஒரு காரியம் இல்லை,’ என்கிறாள்.

_____________________________________________________

1. ‘குறைவிலமே’ என்பது, முன்னைய பாடம். ஒவ்வொரு பாசுரத்தின் ஈற்றிலும்
  வியாக்கியாதா அருளிச்செய்யும் பொருளை நோக்குமிடத்துக் ‘குறை இலமே’
  என்ற பாடமே ஏற்புடையதாகும். ‘மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
  பயக்குறை இல்லைத் தாம்வாழுநாளே’ என்ற புறநானூற்றின் அடிகட்கு,
  ‘மயக்கும் புதல்வரை இல்லாதார்க்குப் பயனாகிய முடிக்கப்படும் பொருள்
  இல்லை, தாம் உயிர் வாழும் நாளின்கண் என்றவாறு’ என்று அதன்
  உரையாசிரியர் எழுதிய உரையானும், ‘குறை - இன்றியமையாத பொருள்;
  அது, ‘பயக்குறை இல்லைத் தாம் வாழுநாளே’ என்பதனாலும் அறிக,’ என்ற
  பரிமேலழகர் உரையானும் (குறள். 612.), ‘பொருளைச்
  சொல்இன்றியமையாமையின், அதனைக் ‘குறை’ என்றார்; ‘பயக்குறை
  இல்லைத் தாம் வாழுநாளே என்றாற்போலே’ என்ற சேனாவரையர்
  உரையானும் (தொல். சொல். சூத். 396.) உணர்தல் தகும்.

2. பாசுரத்தில் ‘ஏறாளும்’ என்றது முதல் ‘தனியுடம்பன்’ என்பது முடியக்
  கடாக்ஷித்து, ‘எல்லையில்லாத குணத்தையுடையவனுமாய்’ என்றும், ‘குலம்
  குலமா’ என்றது முதல் ‘படை தொட்ட’ என்றது முடியக் கடாக்ஷித்து,
  ‘விரோதிகளை . . . ஆற்றலையுடையவனுமாய்’ என்றும், ஈற்றடியைத்
  திருவுள்ளம் பற்றி, ‘எம்பெருமான்’ என்று தொடங்கியும், அவதாரிகை
  அருளிச்செய்கிறார். இங்குக் ‘குணத்தை’ என்றது, சௌசீல்ய குணத்தை.
  சௌசீல்யமாவது, ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாகவுடைய இறைவன்,
  அங்கு நின்றும் சமுசாரி சேதநர் நின்றவிடத்தே வந்து அவதரித்து
  எளியனாகி எல்லாரோடும் கலந்து பரிமாறித் தன்னைத் தாழவிட்டால்,
  ‘இப்படிச் சிறியாரளவிலே நம்மைத் தாழ விட்டோமே!’ என்று தன்
  திருவுள்ளத்திலும் இன்றிக்கே இருத்தல்.