முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
298

ஒண

ஒண்ணாத தோள் படைத்தவன்’ என்பதாம். அணி - ஆபரணம். மானம் - அளவு; நீட்சி. அன்றிக்கே, ‘அணி என்று அழகாய், மானம் என்று பெருமையாய், அணி பெருகிய தோள்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர். 1அதனாலும், ‘ஆபரணத்துக்கு ஆபரணம்’ என்கிறபடியாய் இருக்கை.

    அடல் ஆழித் தடக்கையன் - 2பிராட்டியும் தானுமான சேர்த்திக்குப் பரமபதத்திலுங்கூட என் வருகிறதோ என்று ஐயங்கொண்டு எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய்ப் பகைவர்களைக் கொல்லும் தன்மையையுடைய திருவாழியைத் தடக்கையிலேயுடையவன். 3இவனுடைய விருத்தம் கைமேலே காணலாய் இருக்கிறபடி. பணி மானம் பிழையாமே - 4‘நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, கைங்கரியத்தில் ஓரளவும் குறையாமல். பணி - கைங்கரியம். மானம் - அளவு. அடியேனைப் பணி கொண்ட - இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே, இருவருங்கூட இருந்துகாணும்

_____________________________________________________

1. தமிழ்ப்புலவர் கூறிய பொருளால், அழகின் மிகுதியைச் சொல்லி,
  ஆபரணத்தின் அழகையும் விஞ்சியிருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.
  இந்தப் பொருளாகிலும் சீயர் அருளிச்செய்த பொருளே சித்திக்கும் என்கிறார்,
  ‘அதனாலும்’ என்று தொடங்கி. ‘அதனாலும்’ என்றது, ‘அணி பெருகிய
  தோள் என்ற பொருளாலும்’ என்றபடி. ‘ஆபரணத்திற்கு’ என்று தொடங்கும்
  பொருளையுடைய சுலோகம், விக்கிரமோர்வசீய நாடகம். இங்கே,

  ‘அமிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென அமைக்கு மாபோல்
  உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை யுருவினை மறைப்ப தோரார்,
  அமிழ்தினைச் சுவைசெய் தென்ன ஆழகினுக் கழகு செய்தார்;
  இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ!’

(கம்ப. கோலங்காண் பட. 3)

  ‘பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்
  நாணுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர்’

(நளவெண்பா)

  என்பனவற்றை நினைவுகூர்க.

2. ‘மலர்மாதர் உறைமார்பன்’ என்றதற்குத் தகுதியாக, ‘அடலாழி’ என்றதற்குப்
  பிரயோஜனத்தை அருளிச்செய்யாநின்று கொண்டு, சொல்லுக்குப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘பிராட்டி’ என்று தொடங்கி.

3. ‘இவனுடைய’ விருத்தம் என்று தொடங்கும் வாக்கியம், ரசோக்தி. விருத்தம் -
  ஆசாரமும், திருவாழியும். ‘கைமேலே’ என்பதற்குக் ‘கையின்மேலே’
  என்பதும், ‘பிரத்யக்ஷமாக’ என்பதும் பொருள்.

4. ஸ்ரீராமா. அயோத். 31 : 25.