முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
30

ஆதல

    ஆதலின் - ஆன பின்பு, ‘வாழ்வின் நிலையாமை இதுவான பின்பு’ என்றபடி. ஆதி அம் சோதி குணங்கள் கோமின் - எல்லா ஐஸ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய்மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய், எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தையுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள். 1‘சொரூபத்தைப் பற்றியதாயும் விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார், ‘ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார். 2‘நான் பரமாத்துமாவாகிய இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்றும், 3‘அவன் எல்லாக் கல்யாண குணங்களையும் பரமாத்துமாவோடு அனுபவிக்கிறான்,’ என்றும், 4‘ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்’ என்றும் சொல்லப்படுகின்றவாறே’ அனுபவியுங்கோள்’ என்றவாறு.

(7)

340

        குணங்கொள் நிறைபுகழ் மன்னர்
            கொடைக்கடன் பூண்டிருந்து
        இணங்கி உலகுஉடன் ஆக்கிலும்,
            ஆங்குஅவ னைஇல்லார்
        மணங்கொண்ட போகத்து மன்னியும்
            மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
        பணங்கொள் அரவணை யான்திரு
            நாமம் படிமினோ.

_____________________________________________________

1. ‘ஆதி’ என்றதனை நோக்கி, ‘சொரூபத்தைப் பற்றியதாயும்’ என்கிறார். ‘அம்
  சோதி’ என்றதனை நோக்கி, ‘விக்கிரஹத்தைப் பற்றியதாயும் என்கிறார்.
  கோமின் - சேர்த்து அனுபவியுங்கோள். கோத்தல் - சேர்த்தல்.

2. தைத்திரீய உப. பிரு. 10. ‘அறுசுவை அடிசிலை விடுத்து, ஆறு
  குணங்களுடைய பகவானாகிற அன்னத்தை உண்ணுங்கோள் என்கிறார்,’
  என்றபடி.

3. ஆனந்த வல்லி, 1 : 2.

4. ‘துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
  திணைநாளும் இன்புடைத்தா மேலும் - கணைநாணில்
  ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நல்நெஞ்சே!
  ஓவாத ஊணாக உண்.’

  என்பது பெரிய திருவந்தாதி, 78.