முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
307

    சறையினார் - 1சறைகைமணி என்று ஒரு மணி உண்டாயிற்று, ஆயர்கள் அரையிலே கோத்துக்கட்டி முன்னே போகாநின்றால் அந்த ஒலியின் வழியே பசுக்கள் எல்லாம் ஓடி வரும்படியாய் இருப்பது ஒன்று; அதனையுடையவர்கள். அன்றிக்கே, ‘சறை’ என்று தாழ்வாய்’ ‘முதன்மை பெற்ற சாதிகளில் ஒக்க எண்ண ஒண்ணாத தாழ்ந்த ஆயர் குலத்திலே பிறந்தவர்’ என்னுதல். அன்றிக்கே, ‘சறை’ என்று சறாம்புகையாய், ‘மற்றைய ஆயர்கள் விஷூ அயந சங்கிரமணங்களுக்கு உடம்பு இருக்கத் தலை குளித்தல், உடம்பிலே துளி நீர் ஏறிட்டுக்கொள்ளுதல் செய்வர்களாகில், இவன் அவ்வாறு செய்வதற்கும் காலம் இன்றி இருக்குமாயிற்றுப் பசுக்களின் பின்னே திரிகையாலே,’ என்னுதல். 2பாதுகாக்கப்படுகின்ற பொருள்களைப் பாதுகாத்தலுக்காகத் தன்னைப் பேணாத அவ்வடிவை அணைப்பதற்காயிற்று இவள் ஆசைப்படுகின்றது. என்றது, 3‘பிராட்டி, ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட ஜனககுலத்திற் பிறந்தவளாகையாலே, ‘தீக்ஷிதம்’ என்ற சுலோகத்திற்கூறிய அவ்வடிவை விரும்பியது போன்று, ஆசார நிர்ப்பந்தமில்லாத ஆயர் குலத்தில் பிறந்தவளாகையாலே இவ்வடிவை விரும்பினாளாயிற்று இவள்,’ என்றபடி.

    கவராத தளிர் நிறத்தால் குறை இலம் - அவன் விரும்பாத பிரமசாரி நிறத்தால் என்ன காரியம் உண்டு? என்றது, 4இராவணனைக் கொன்ற பின்பு பிராட்டி நீராடி

_____________________________________________________

1. ‘சறையினார்’ என்பதற்கு மூன்று பொருள் : ‘சறைகை மணியையுடையவர்’
  என்றும், ‘தாழ்ந்த சாதியிற்பிறந்தவர்’ என்றும், ‘அழுக்கடைந்த
  உடம்பையுடையவர்’ என்றும். சறாம்புகை -தன்னைப் பேணாமை. விஷூ -
  மேஷம் அல்லது, துலாத்தில் சூரியன் பிரவேசிக்குங்காலம். அயனம் - வழி
  :உத்தராயண தக்ஷிணாயனப் பிரவேச காலம். சங்கிரமணம் - சூரியன் ஓர்
  இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுதல்.

2. ‘அழுக்கடைந்த உடம்பை விரும்புவது என்?’ எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘பாதுகாக்கப்படுகின்ற’ என்று தொடங்கி.

3. ‘இவள் ஆசைப்பட்டது, பிராட்டி ஆசைப்பட்டாற்போன்று இருக்கிறது,’
  என்று கூறத் திருவுள்ளம் பற்றி, அதனை அருளிச்செய்கிறார், ‘பிராட்டி’
  என்று தொடங்கி. இவள் - நப்பின்னைப் பிராட்டி. பிராட்டி - ஜானகி.

4. இதன் விரிவைக் கம்பராமாயணம், மீட்சிப்படலம், 39 முதல் 68 முடியவுள்ள
  செய்யுள்களில் காணலாகும்.