முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
33

படுக்கையையுடையவன் என்பார், ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்று அருளிச்செய்கிறார் என்னுதல்.

    1இனி, ‘பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலான உலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’ என்று இத்திருப்பாசுரத்திற்குப் பொருள் கூறலுமாம்.

(8)

341

        படிமன்னும் பல்கலன் பற்றோடு
            அறுத்து,ஐம் புலன்வென்று,
        செடிமன்னு காயம்செற் றார்களும்,
            ஆங்குஅவ னைஇல்லார்
        குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தியும்
            மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
        கொடிமன்னு புள்ளுடை அண்ணல்
            கழல்கள் குறுகுமினோ. 

    பொ-ரை : பூமியையும் பொருந்திய பல ஆபரணங்களையும் அவற்றிலுள்ள வாசனையோடு நீக்கி, ஐந்து இந்திரியங்களையும் வென்று, தூறு மண்டும்படி இச்சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்தவர்களும், அவ்விஷயத்தில் அவனுடைய திருவருள் இல்லாதவர்கள் குடிகள் பொருந்தி இருக்கின்ற இனிமையையுடைய சுவர்க்கலோகத்தை அடையினும் மீண்டு வருவார்கள்; ஆதலால், நிலைபெற்ற கொடியிலே கருடப்பறவையையுடைய சர்வேசுவரனுடைய திருவடிகளைச் சேருங்கோள்; சேர்ந்தால், மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய உலகத்தைப் பெறலாம்.

    வி-கு : ‘அறுத்து வென்று செற்றார்களும் அவனை இல்லார் எய்தியும் மீள்வர்கள்,’ என்க. ‘அண்ணல் கழல்கள் குறுகுமின்; மீள்வு இல்லை,’ எனக் கூட்டுக.

_____________________________________________________

1. ‘மீள்வர்கள்’ என்னும் போது உயர ஏறி மீள்வர்கள் என்று
  தோன்றுகையாலே, இவ்வுலக ஐஸ்வர்யம் நிலையற்றது என்று அருளிச்
  செய்த யோஜனை அன்றிக்கே, மறுமைச் செல்வங்களான சுவர்க்கம்
  முதலானவைகள் நித்தியமாக இருக்குமோ?’ என்ன, அவையும் நிலையற்றவை
  என்று வேறும் ஒரு யோஜனை அருளிச்செய்கிறார், ‘இனிப் பலத்தில்’ என்று
  தொடங்கி. ஆக, இப்பாசுரத்திற்கு, ‘இம்மைச் செல்வம் நிலையற்றது;
  மறுமைச் செல்வமும் நிலையற்றது,’ என்ற இரு வகையாகப் பொருள்
  அருளிச் செய்தவாறு.