முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
344

New Page 1

செய்தலாகிற பெருந்துன்பத்தைக் காட்டிலும் நெருப்பினுடைய சுவாலைகளாகிற கூட்டின் நடுவில் அடங்கி இருப்பதானது சிறந்தது,’ என்கிறபடியே, இவர்கள் நடுவில் இருக்கிற இருப்புத் தவிருகைதானே இப்போது தேட்டம் ஆகையாலே சொல்லுகிறார். என்றது, ‘காட்டுத் தீயில் அகப்பட்டவனுக்கு நீரும் நிழலுமே அன்றோ முற்படத் தேட்டமாவது? பின்பே அன்றோ இனிய பொருள்களிலே நெஞ்சுசெல்வது? அப்படியே, இப்போது இவர்கள் நடுவில் இருத்தற்கு அடியான சரீரத்தின் பிரிவைப் பிறப்பிக்கவேண்டும் என்கிறார்,’ என்றபடி. 

(1)

422

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

    பொ-ரை : ‘சாகின்ற விதமும், செல்வம் கெடுகின்ற விதமும், தாயாதிகளும் மற்றைய உறவினர்களும் மேல் விழுந்து மேல் விழுந்து துக்கத்தினால் கிடந்து அழுகின்ற வகையுமான உலக இயற்கை இவை என்ன? இவர்கள் உய்யும் வகை ஒன்றனையும் அறிகின்றிலேன் யான். அரவணையாய்! அம்மானே! அடியேன் விஷயத்தில் திருவுள்ளம் பற்றி அடியேனை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் வகையில் விரைய வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு :  தமர் - தாயத்தார். உற்றார் - மற்றைய உறவினர். தலைத்தலை - இடந்தோறும். அரவணை - பாம்புப்படுக்கை. ‘குறிக்கொண்டு அடியேனைக் கூமாறே விரை கண்டாய்,’ என்க. கண்டாய் - முன்னிலையசைச்சொல்.

    ஈடு : இரண்டாம் பாட்டு, 1முதற்பாசுரத்திலே ‘எண் ஆராத் துயர்’ என்று தொகுத்துக் கூறினார்; அவற்றிலே சில வகைகளைச் சொல்லித் துன்பம் அடைந்தவராய், ‘இவர்கள் துக்கத்தைப் போக்காயாகில் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.

    சாமாறும் கெடுமாறும் - சாகும்படியும் கெடும்படியும். ‘‘ஆறும், ஆறும்’ என்னுதல் என்னை? சாதலுக்கும் கெடுதலுக்கும்

_____________________________________________________

1. பாசுரமுழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.