முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
37

New Page 1

‘இவைபோல் அன்றிக்கே, ஆத்தும அனுபவம் நிலை நின்ற புருஷார்த்தமே அன்றோ?’ என்னில்,’ ‘மேலே கூறியவற்றை நோக்கும்போது இதற்கு ஒரு நன்மை உண்டேயாகிலும், பகவானுடைய ஆனந்தத்தைப் பார்க்கும்போது இது மிகச் சிறியதாய் இருக்கையாலே இதுவும் தண்ணிது; ஆன பின்பு, அவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.

    குறுக உணர்வத்தொடு மிக நோக்கி - பல காலம் புறம்பே உள்ள விஷயங்களில் பண்ணிப் போந்த வாசனை அடைய ஆத்துமாவிலேயாம்படி 1‘விசத தமமாகத் தியானம் செய்து’ என்றது, ‘புறம்பேயுள்ள விஷயங்களிலே தூரப் போய்ப் பற்றுகின்ற மனத்தினை ஆத்துமாவின் பக்கலிலே சேர்த்து’ என்றபடி. இது 2கண்ணை இட்டுக் கண்ணைப் பார்த்தாற்போலே இருப்பது ஒன்று ஆதலின், 3குறுக’ என்கிறார். இதனால், முதல் தன்னிலே ஆத்துமாவின் பக்கலிலே சேர்த்திய மனத்தினையுடையவனுக்கே ஆத்தும அனுபவத்தில் அதிகாரம் உள்ளது என்பதனைத் தெரிவித்தபடி. எல்லாம் விட்ட - 4திருமகள் கேள்வன் பெரிய திருவடி திருத்தோளிலே தோளும் தோள் மாலையுமாய் வந்து நின்றாலும், சாணகச்சாற்றைப் போன்று சுத்தி மாத்திரத்தையே பற்றிக்கொண்டு, இனிமையிலே நெஞ்சு செல்லாதபடி அதனையும் விடுவது.

    இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் - 5சங்கோசத்தை மோக்ஷம் என்று சொல்லுகிற ஆத்தும ஞானிக்கும்.

_____________________________________________________

1. விசததமமாக - விளக்கமாக; மிக நன்றாக.  

2. ‘கண்ணையிட்டுக் கண்ணைப் பார்த்தாற்போலே’ என்றது, தர்மபூத
  ஞானத்தாலே ஞான சொரூபனான ஆத்துமாவைப் பார்த்தலைக் குறித்தபடி.

3. குறுக - குறுக்கி; சேர்த்து.

4. ‘எல்லாம் விட்ட’ என்றது, ஆத்துமாவிற்கு வேறுபட்ட
  பொருள்களையெல்லாம் விடுதலைத் தெரிவித்தபடி. ‘திருமகள் கேள்வன்’
  என்று தொடங்கும் வாக்கியம், எல்லாம் விடுதலின் முடிவு எல்லை.
  சாணகச்சாறு - பஞ்ச கவ்யம்.

5. சங்கோசமாவது, சர்வேசுவரன் அளவும் போகாமல் அணு அளவான
  ஆத்தும மாத்திரத்திலேயே முடிவாக நிற்றல்.