430
430
கண்டுகேட்டு உற்றுமோந்து
உண்டுஉழலும் ஐங்கருவி
கண்டஇன்பம், தெரிவரிய
அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண்தொடியாள் திருமகளும்
நீயுமே நிலாநிற்ப,
கண்டசதிர் கண்டொழிந்தேன்;
அடைந்தேன்உன் திருவடியே.
பொ-ரை :
‘கண்டும் கேட்டும் உற்றும் மோந்தும் உண்டும் திரிகின்ற ஐந்து இந்திரியங்களாலே அனுபவிக்கிற
ஐஸ்வரிய இன்பமும், இந்த இந்திரியங்களாலே தெரிந்து அனுபவிக்க அரியதான அளவில்லாத ஆத்தும
அனுபவ இன்பமும், ஒள்ளிய தொடியினையுடையளாய திருமகளும் நீயும் ஒருபடிப்பட்டு நிற்கும்படியாகச் செய்து
வைத்த நல் விரகை நேரே கண்டு, மேலே கூறிய இரண்டு இன்பங்களையும் ஒழிந்தேன்; உன் திருவடிகளை
அடைந்தேன்,’ என்கிறார்.
வி-கு :
‘நிலா நிற்பக் கண்ட சதிரைக் கண்டு, கண்ட இன்பமும், சிற்றின்பமும் ஒழிந்தேன்,’ என்க.
ஈடு :
பத்தாம் பாட்டு. 1மேற்பாசுரத்தில், ‘விடுத்து’ என்றும், ‘கூட்டினை’ என்றும்
சொல்லப்பட்ட பேற்றினைப் பிரீதியின் மிகுதியாலே ‘விட்டது இது; பற்றினது இது’ என்று விளக்கமாக
அருளிச்செய்கிறார் இத்திருப்பாசுரத்தில்.
2கண்டு
கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி - காட்சிக்குக் கருவியாக இருக்கும் கண், கேட்கைக்குக்
கருவியாக இருக்கும் செவி, பரிசித்து அறிதற்குக் கருவியாக இருக்கும் சரீர இந்திரியம், நாற்றத்தை
அறிதற்குக் கருவியாக இருக்கும் மூக்கு, சுவையை அனுபவிப்பதற்குக் கருவியாக இருக்கும் நாக்கு; கண்டு
கேட்டு உற்று மோந்து உண்டு இப்படி இவையே செயலாய்ப் போருகைக்குக் கருவிகளாக இருப்பனவேயாமன்றோ
கண் முதலான இந்திரியங்கள்? ஐங்கருவி கண்ட இன்பம் -
____________________________________________________
1. பாசுரத்தின் முன் இரண்டு
அடிகளையும் கடாக்ஷித்து, ‘விட்டது இது’
என்றும், பின் இரண்டு அடிகளையும் கடாக்ஷித்துப் ‘பற்றினது
இது’ என்றும்
அருளிச்செய்கிறார்.
2. ‘கண்டுகேட் டுண்டுயிர்த்
துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.’
என்பது திருக்குறள்.
‘உண்டுகேட் டுற்றுமோந்
தும்பார்க்கு மைவர்க்கே
தொண்டுபட லாமோஉன் தொண்டனேன்?’
என்பது நூற்றெட்டுத் திருப்பதியந்.
25.
|