முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
424

உண

உண்டாமன்று ஆயிற்று, சிவன் பக்கல் பரத்துவம் உள்ளது.

    மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூரதனுள் - செந்நெற்பயிர்கள் கதிர்களின் கனத்தாலே அவ்வருகுக்கு இவ்வருகு அசைகிற போது சாமரை வீசினாற்போலே ஆயிற்று இருப்பது. என்றது, ‘இப்படி எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாய் இருக்கிற சர்வேசுவரன் ‘தூரத்தில் உள்ளான்’ என்ற கண்ணழிவும் இல்லாதபடி திருநகரியிலே வந்து அண்மையில் இருப்பவன் ஆனான்; எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாய் இருக்கிற அவன் இங்கே வந்து நிற்கையாலே, அறிவுடைப்பொருள் அறிவில்லாப்பொருள் என்ற வேறுபாடு இல்லாமல், 1‘நீ வனத்தில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று சொல்லப்பட்ட இளைய பெருமாளைப் போன்று அநுகூலமான தொழில்களைச் செய்கிறபடியைத் தெரிவித்தவாறு.

    பொலிந்து நின்ற பிரான் கண்டீர் - பரமபதத்தை விட்டு இம்மக்கள் நடுவே வந்து புகுந்த இடத்து அவர்கள் படுகின்ற கிலேசத்தைத் தானும் ஒக்கப்படுகை அன்றிக்கே, இவ்வருகே போதரப் போதரச் சொரூப ரூப குண விபூதிகள் மேன்மேலென விஞ்சி வாராநின்றன ஆயின. அன்றிக்கே, ‘சொன்னார் சொன்னவற்றுக்கும் எல்லாம் அவ்வருகாயிருக்கும்,’ என்னுதல். ஒன்றும் பொய் இல்லை - 2மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே, பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை. 3அவ்வத்தேவர்கட்கு இயல்பிலே உயர்வு இல்லாமையாலே

_____________________________________________________

1. ஸ்ரீராமா. அயோத். 40 : 5. செந்நெல்லைக் கூறியது,
  அசேதனங்களுக்கெல்லாம் உபலக்ஷணம். ‘கவரி வீசும்’ என்றது, அநுகூலமான
  தொழில்களுக்கெல்லாம் உபலக்ஷணம். இளைய பெருமாளைத்
  திருஷ்டாந்தமாகக் கூறியது, ‘சத்ர சாமர பாணிஸ்து’ (ஸ்ரீராமாயணம்) என்று
  சொல்லப்பட்டவராகையாலே.

2. ‘மற்றைத் தேவர்கட்கு’ என்று தொடங்கும் வாக்கியப் பொருளோடு
  ‘இறைமைக்குணங்கள் இலராயினாரை உடையர் எனக் கருதி அறிவிலார்
  கூறுகிற புகழ்கள் பொருள் சேரா ஆதலின், அவை முற்றுமுடைய இறைவன்
  புகழே ‘பொருள்சேர் புகழ்’ எனப்பட்டது,’ என்ற பரிமேலழகர் உரையை ஒப்பு
  நோக்குக. (திருக்குறள், 5.)

3. ‘மற்றைத்தேவர்கட்குச் சொல்லும் உயர்வுகள் பொய்யாயிருப்பதற்கும், பகவான்
  விஷயத்தில் பொய்யில்லாமைக்கும் அடி யாது?’ என்ன, ‘அவ்வத்தேவர்கட்கு’
  என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்.