முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
43

New Page 1

‘இதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவுள்ளம் பற்றுங்கோள்’ என்று பிள்ளை அருளிச்செய்வர். என்றது, ‘இது கண்கூடாகக் காண்பது போன்று இச்சரீரம் நீங்கிய பின்னர் அதுவும் காண அன்றோ நாம் புகுகிறது! 1இனி எத்தனைநாள்?’ என்றபடி. ஆக 2மூன்று திருவாய்மொழிகளாலும் இப்படிப் பரோபதேசம் செய்த இது, சமுசாரிகள் திருந்துகைக்குக் காரணம் ஆகாமல். 3அத்தாலும் தமக்குப் பகவானிடத்திலே விடாய் பிறந்தபடி சொல்லுகிறார் இதில்.

    என்றது, 4மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைச் சொல்லுதல் முன்னாகப் பகவானுடைய வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, ‘அவனைப் பற்றுங்கோள்; மற்றைய விஷயங்களை விடுங்கோள்,’ என்றே அன்றோ அருளிச் செய்தது? அது அவர்கள் திருந்துவதற்குக் காரணமாகாமல் தமக்குப் பற்று மிகுதற்குக் காரணமாயிற்று; 5ஸ்ரீ விபீஷணாழ்வான் இராவணனுக்குச் சொன்ன நலம் அவன் திருந்துவதற்குக் காரணமாகாமல் தான் பெருமாளைப் பற்றுதற்குக் காரணம் ஆனாற்போலேயும், ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் இரணியனுக்குச் சொன்ன நலம் அவன் நெஞ்சிலே படாமல் தனக்குப் பகவானிடத்தில் பத்தி மிகுதற்குக் காரணம் ஆனாற்போலேயும், ‘வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்’ என்னும் இம் மூன்று திருவாய்மொழிகளிலும் பிறரைக் குறித்து அருளிச்

_____________________________________________________

1. ‘இனி, எத்தனை நாள்?’ என்றது, ‘இந்தச் சரீரத்தோடு கூடியிருந்து
  துக்கப்படுவது இனி எத்தனை நாள்?’ என்றபடி.

2. ‘மூன்று திருவாய்மொழிகளாலும்’ என்றது, ‘வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால்
  விரோதம்’, ‘ஒரு நாயகமாய்’ என்ற மூன்று திருவாய்மொழிகளாலும் என்றபடி.

3. ‘அத்தாலும்’ என்ற உண்மை, ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற்பிறந்த
  விடாயைத் தழுவுகிறது. அத்தால் - பரோபதேசத்தால்.

4. ‘பிறர்பொருட்டுச் சொன்னவை, தமக்கு ஆசை பிறத்தற்குக் காரணமாகக்
  கூடுமோ?’ என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘மற்றைய விஷயங்களினுடைய’ என்று தொடங்கி.

5. அதனை உதாரண முகத்தால் விவரிக்கிறார், ‘ஸ்ரீவிபீஷணாழ்வான்’ என்று
  தொடங்கி, சங்காயம் - ஆனைப்புல்.