முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
431

New Page 1

மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் சேவிக்கமாட்டார்கள்; ‘என்னை?’ எனின், ‘அந்தத் தேவர்களிடமிருந்து கிடைக்கும் பலம் மிகச் சிறியது,’ என்கிறபடியே ‘மோக்ஷபலம் சித்திக்க வேணும்’ என்று இருக்கிறவர்கள், புன்சிறு தெய்வங்களைப் பின் செல்லார்களே அன்றோ? அதற்குக் காரணம், அவர்களால் கொடுக்கப்படுமவை அழியக்கூடிய பலன்களாகையாலே. ‘முருகன் சிவன் இந்திரன் முதலான தேவர்கள் ஆராதிக்கும் விஷயத்தில் விலக்கப்பட்டிருக்கிறார்கள்,’ என்றதே அன்றோ சாஸ்திரமும்?

    1ஒருவன் பகவானைத் தியானம் செய்துகொண்டிருக்கச்செய்தே, ‘இவன் சமாதியிலே நின்ற நிலையை அறியவேண்டும்’ என்று பார்த்துச் சர்வேசுவரன் இந்திரன் வேடத்தை மேற்கொண்டு ஐராவதத்திலே ஏறி வந்து முன்னே நின்று, ‘உனக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் யார்?’ என்றான்; ‘சர்வேசுவரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்’ என்னுமிடம் அறியானே, கொண்டு வந்த வேடம் இதுவாகையாலே?’ வந்தவனைப் பார்த்து, ‘நீ யாவன் ஒருவனை அடைந்து இந்தச் செல்வம் முழுதும் பெற்றாய்? அப்படிப்பட்டவனைக்காண் நான் பற்றுகிறது; இப்படி வழியிலே போவார்க்கு எல்லாம் பச்சையிட்டுத் திரியுமவன் அல்லேன்காண்; இப்போது முகங்காட்டாதே போக வல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றானே அன்றோ?
_____________________________________________________

1. ‘முமுக்ஷூக்கள் இதர தேவர்களைப் போற்ற மாட்டார்கள்,’ என்பதற்கு
  அநுஷ்டானமும் காட்டுகிறார் ‘ஒருவன்’ என்று தொடங்கி. ‘ஒருவன்’ என்றது,
  அம்பரீஷனை. இங்கே, சரபங்கர் பிறப்பு நீங்கிய வரலாறும் நினைவிற்கு
  வருகின்றது. கம்பராமாயணம், சரபங்கர் பிறப்பு நீங்கிய படலம் காணல் தகும்.