முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
44

New Page 1

செய்த நலம் அவர்கள் திருந்துவதற்குக் காரணம் ஆகாமல், மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் நூறு கிளைகளாகப் பணைத்துப் பலிக்குமாறு போலே தமக்கு அவன் பக்கலிலே காதல் நூறு கிளைகளாகப் பணைக்கைக்குக் காரணம் ஆயிற்று என்றபடி. இவர்களுக்குக் களையாவது, பகவானுக்கு வேறுபட்ட விஷயங்களும், சேவிக்கத் தகாதாரைச் சேவைசெய்து திரிகையும், ஐஸ்வர்யத்தைப் புருஷார்த்தம் என்று இருக்கையும். சங்காயமாவது, பயிர்களின் இடையிடையே முளைத்து, அறியாதார்க்குப் பயிர் போலே தோற்றி, அதனை வாரிப் போகடாத போது நெல் பதர்க்கும்படியாய் இருப்பது ஒன்று. அப்படியே கைவல்யமும்.

    1இந்தக் காதற்பெருக்கும் இப்படிச் செல்லாநிற்கச் செய்தே, முன்பு ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த விடாய் 2வேறு ரசங்களாலே மூடப்பட்டுக் கிடந்தது; அந்த விடாய் தலை எடுத்து, ‘தேசத்தாலும் காலத்தோடும் தேசத்தோடும் கூட்டி இப்போதே அனுபவிக்க வேண்டும்,’ என்னும் விடாயையும் பிறப்பித்தது; அவை அப்போதே கிடையாமையாலே அந்த விடாய்தான் 3வேறு நிலையைப் பிறப்பித்தது; அந்த நிலைதான் சர்வேசுவரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி நிலையாய், பிராட்டிதான் மயங்கினவளாய்க் கிடக்க, அவள் நிலையைப் பார்த்த திருத்தாயார், ‘தேசத்தாலும் காலத்தாலும் கை கழிந்த அவன் படிகளையும் அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும் கூட்டி இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்கிறாள்,’ என்கிற பாசுரத்தாலே தம் நிலையைப் பேசுகிறார்.

_____________________________________________________

1. மேலே பரோபதேசம் செய்த வழியாலும், ‘முடியானே’ என்ற
  திருவாய்மொழியின் இழவாலும், இத்திருவாய்மொழியில் இத்தகைய காதல்
  உண்டாயிற்று என்கைக்காக, இரண்டு காரணத்தையும் காட்டுகிறார், ‘இந்தக்
  காதற்பெருக்கும்’ என்று தொடங்கி. இந்தக் காதற்பெருக்கும் - இப்படிப்
  பரோபதேசம் அடியாக உண்டான காதற்பெருக்கும்.

2. ‘வேறு ரசங்களாலே’ என்றது, களையும் சங்காயமுமான ஐஸ்வர்ய
  கைவல்யங்களை.

3. வேறு நிலையை - நாயகி நிலையை.