முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
46

    வி-கு : ‘வல்வினையேன் மடவல்லி ஆல் இலை அன்ன வசம் செயும் அண்ணலார் தாளிணை துழாய் என்றே மாலும்,’ என்று கூட்டுக. ‘பரிவு இன்றி அன்ன வசம் செயும் அண்ணலார்’ என்க.

    இத்திருவாய்மொழி, கலி விருத்தம்.

    ஈடு : முதற்பாட்டு. 1‘ஆல் இலையைப் படுக்கையாக உடையவனுடைய திருவடிகளிலே சார்த்தின திருத்துழாயைச் செவ்வியோடே இப்போதே பெறவேண்டும் என்று ஆசைப்படாநின்றாள்,’ என்கிறாள்.

    பாலன் ஆய் - கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தை உடையனாய்; 2‘படியாதும் இல் குழவிப் படி’ என்னக் கடவது அன்றோ? 3பருவம் நிரம்பின பின்பு உலகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து ஆலிலையிலே சாய்ந்தானாகில், என் மகள் இப்பாடு படாளே! ‘அவன் ஒரு நிலையிலேகாண் காப்பாற்றுமவன் ஆவது’ என்று மீட்கலாமே!’ என்பாள், ‘பாலன்’ என்கிறாள். 4‘என்னை மனிதனாகவே எண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த நிலை ஒழிய முன் நிலை நெஞ்சிற்படாமல் இருந்தானாதலின், ‘ஆய்’ என்கிறாள். ஏழ் உலகு உண்டு -5‘இது சரிக்கும்; இது சரியாது,’

_____________________________________________________

1. ‘ஆல் இலை அன்ன வசஞ்செயும்’ என்றது முதல் ‘மாலுமால்’ என்றது
  முடியக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. திருவாய்மொழி, 3. 7 : 10. இது, கலப்பற்ற பிள்ளைத்தனத்தை உடைமைக்கு
  மேற்கோள்.

3. ‘பாலனாய்க்கொண்டு உலகங்களையெல்லாம் வயிற்றிலே வைத்து
  ஆலிலையில் சாய்ந்தவன் திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படுகிறாள்,’
  என்று சொல்லுகிற திருத்தாயாருடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்.
  ‘பருவம் நிரம்பின பின்பு’ என்று தொடங்கி. ‘அவன் ஒரு நிலையிலேகாண்
  காப்பாற்றுமவன் ஆவது,’ என்றது, பருவம் நிரம்பின பின் செய்தால்,
  ‘உலகத்துக்கு ஓராபத்து வந்த போதுகாண் அதனைக் காக்கும்பொருட்டு
  இச்செயலைச் செய்தது; இப்போது செய்யுமதுவோ அது?’ என்று மீட்கலாம்;
  அங்ஙன் அன்றிக்கே, ‘கார்யாகார்ய யோக்கியதையில்லாத பருவத்தில்
  செய்ததாகையாலே, இப்போது செய்யத் தட்டு என்?’ என்பது மகளுக்குக்
  கருத்து என்கிறாள் என்றபடி.

4. ஸ்ரீராமா. யுத். 120 : 11.

5. ‘பாலனாய் ஏழுலகு உண்ணக் கூடுமோ?’ என்னும் வினாவைத் திருவுள்ளம்
  பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இது சரிக்கும்’ என்று தொடங்கி.