முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
56

உப

உபகோசல சாண்டில்யாதி வித்யா நிஷ்டரைச் சொல்லவுமாம்.

    1பேதங்கள் சொல்லி - தாங்கள் அனுபவிக்கிற குணங்களுக்கு ஏற்றங்களைச் சொல்லி; என்றது, சீல குணத்தை அனுபவித்து, இதுவும் ஒரு குணமே! இது போலேயோ வீர குணம்!’ என்றாற்போலே சொல்லுதல் என்றபடி. பிதற்றும் - அந்தக் குணங்களிலே ஈடுபட்டு ஜ்வரசந்நி பதிதரைப்போலே அடைவு கெடக் கூப்பிடா நிற்பர்கள். பிரான் பரன் - 2அவர்களுக்கு இப்படி உபகாரகனான ஸ்ரீவைகுண்டநாதன்; என்றது, ‘இமையோர்தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்’ என்கிறபடியே, இக்குணங்களை அவர்களுக்கு நிலமாக்கி அனுபவிப்பிக்கையாலே ‘பிரான்’ என்கிறாள் என்றபடி. 

    பரன் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் - ‘சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி’ என்கிறபடியே, மிக்க சீர்த்தொண்டரான நித்தியசூரிகள் அவன் திருவடிகளிலே சார்த்தினதாய், அதனாலேயே மிகவும் விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று எப்போதும் சொல்லாநின்றாள். ஊழ்வினையேன் - 3வந்தது அடைய முறையாம்படியான பாவத்தைப் பண்ணின யான். ஊழ் - முறை. தடந்தோளியே - 4இப்படிக் கைவிஞ்சின

_____________________________________________________

1. பேதம் - ஏற்றம்; அதிசயம்.

      ஜ்வரசந்நி பதிதர் - ஜன்னி சுரத்தில் விழுந்தவர்கள். ‘பிதற்றுதல்’ 
  என்றது, தான் அனுபவிக்கும் குணத்திற்கு ஏற்றம் சொல்லப்புகுந்து, பிறர்
  அனுபவிக்கும் குணத்திற்கு ஏற்றத்தைச் சொல்லிவிடுதல்.

2. பிரான் - உபகாரகன். அந்த உபகாரத்தைக் காட்டுகிறார், ‘அவர்களுக்கு’
  என்று தொடங்கி. ‘இமையோர்தமக்கும்’ என்று பாசுரத்தாலே தரித்திருந்து
  அனுபவிக்க ஒண்ணாமை சொல்லுகையாலே, அதனைத் தரித்திருந்து
  அனுபவிக்கும்படி செய்து அனுபவிப்பிக்கையாலே உபகாரகன் என்றபடி.
  ‘இமையோர் தமக்கும்’ என்ற பாசுரம், திருவிருத்தம், 98.

3. வந்தது அடைய - வந்த துக்கமுழுதும்.

4. ‘தடம்’ என்பது, அழகால் வந்த பரப்பைச் சொல்லுகிறது. ‘கோதில்
  வண்புகழ்’ ஆகையாலே, ‘குணங்களுக்கு இருப்பிடமான’ என்கிறார்.