முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
64

New Page 1

பொருளில் ஒரு பகுதியான உறுப்பு’ என்னுதல். சீதைபொருட்டு - சீதைக்காக. இலங்கை நகர் - சூரிய சந்திரர்கள் சஞ்சரிப்பதற்குப் பயப்படும் ஊர். அம்பு எரி உய்த்தவர் - அம்பாகிய நெருப்பைப் புகச் செய்தவர். 1சக்கரவர்த்தி திருமகன் இதனைக் கைதொட்டு சிக்ஷித்துக் குணவான் ஆக்கிப் பின்பே அன்றோ போகவிட்டது? ஆகையாலே, கேவலாக்நி புகுதற்குக் கூசும் ஊரிலே தன் வாய் வலியாலே புக்கதாயிற்று. இப்படி, தான், 2முதுகிட்டாரையுங்கூட, குணவான்கள் ஆக்கும்படி ஏக்கற்றவருடைய திருவடிகளில் சார்த்தப்பட்ட. வம்பு அவிழ் தண் அம்துழாய் மலர்க்கே - ‘வாசனையையுடைத்தான மலர்’ என்னுதல்; ‘எப்பொழுதும் 3புதியதாகவே இருக்கும் மலர்’ என்னுதல். 4அவன் சக்கரவர்த்தி திருமகனாய் இருக்கச்செய்தேயும். பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை உடையவனாய் இருப்பது போன்று, அவன் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைத்தாலும் இவர்களுக்குத் தோற்றுவது திருத்துழாயாயே ஆதலின், ‘இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள்இணைமேல் அணி துழாய் மலர்’ என்கிறாள்.

_____________________________________________________

1. ‘சூரிய சந்திரர்கள் புகுதற்கு அஞ்சும் ஊரிலே அம்பாகிய நெருப்பைப்
  புகச்செய்தது எப்படி?’ என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று தொடங்கி.
  ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குப் பெருமாள்
  அம்பைத் தொட்டுக் கணுக்களை நிமிர்த்து நாணியிலே ஏறிட்டுப் பின்னே
  அன்றோ பிரயோகித்தது?’ என்பது நேர்ப்பொருள். ‘போரிலே
  தோற்றோடுகின்றவனைப் பயப்படாதபடி கையாலே தொட்டு, அணி
  வகுக்கும் பிரகாரங்களைக் கற்பித்து, குணவானாக்கிப் பின்பேயன்றோ
  போகவிட்டது?’ என்பது தொனிப்பொருள். இங்கே அருச்சுனன், பாய்ந்து
  ஓடின உத்தரகுமாரனைத் திருத்தினமையை நினைவுகூர்க. சிக்ஷித்து -
  கற்பித்து.

2. ‘முதுகிட்டாரையும்’ என்று தொடங்கும் வாக்கியம் சிலேடை : முதுகிட்டார் -
  புறமுதுகு காட்டி ஓடுகிறவர்; முதுகிலே இடப்பட்ட
  அம்பறாத்தூணியையுடையவர். குணவானாக்குதல் - நாணிலே ஏறிடுதல்;
  பவ்யனாக்குதல். ஏக்கற்றவர் - அம்பை எய்வதற்குக் கற்றவர்; ஏவுதலைச்
  செய்கின்றவர்.

3. வம்பு - புதுமை.

4. ‘சக்கரவர்த்தி திருமகனுக்குத் திருத்துழாய் உண்டோ?’ என்னும் வினாவைத்
  திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவன்’ என்று
  தொடங்கி.