முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
75

மீண்டாரே அன்றோ?’ 1ஸ்ரீ கிருஷ்ணன், ‘மாசுச - சோகத்தைக் கொள்ளாதே’ என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய, அருச்சுனன், 2‘சந்தேகங்கள் எல்லாம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்; உனது வார்த்தையின்படி செய்கிறேன்,’ என்று தரித்தானே அன்றோ? பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி, 3கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற்போலே அனுபவத்திற்குத் தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக்கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.

355

கோவை வாயாள் பொருட்டுஏற்றின்
    எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய்!
    குலநல் யானை மருப்புஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப்
    போதால் வணங்கே னேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப்
    பூசும் சாந்துஎன் நெஞ்சமே.

_____________________________________________________

1. ‘ஸ்ரீ கிருஷ்ணன்’ என்று தொடங்கும் வாக்கியம், பிரமாணம் விசுவாச
  ஏதுவானமைக்குத் திருஷ்டாந்தம். இது, ஸ்ரீ கீதை, 18 : 66.

2. ஸ்ரீ கீதை, 18 : 73.

3. ‘கால சக்கரத்தன்’ என்றது, ‘சக்கரம் போன்று சுழன்று வருகின்ற
  காலத்துக்கு நிர்வாஹகன்’ என்றபடி. ‘ஒரு போகி ஆக்கி’ என்றது, ‘நடுவில்
  தடையில்லாத வெளியாக்கி’ என்றபடி. அல்லது, ‘ஒரே காலத்தில் பலமாக்கி’
  என்னலுமாம். பட்டர் நிர்வாகத்துக்கு நிதானம், ‘கால சக்கரத்தானுக்கே’
  என்ற நாலாவது திருப்பாசுரம்.

      ‘மேல் திருவாய்மொழியில் விரும்பியபடியே இத்திருவாய்மொழியில்
  அனுபவிக்கிறார்’ என்று அருளிச்செய்யக் காரணம் வருமாறு : ‘தோளிசேர்
  பின்னை’ என்றதற்கு, ‘கோவை வாயாள்’ என்ற பாசுரம். ‘கொம்புபோல்’
  என்ற பாசுரத்திற்கு, ‘மதிள் இலங்கைக் கோவை வீய’ என்ற பாசுரப்பகுதி.
  ‘பாலனாய்’ என்ற பாசுரத்திற்கு, ‘கால சக்கரத்தோடு’ என்ற பாசுரம்.
  ‘பாவியல் வேத நன்’ என்ற பாசுரத்திற்கு, ‘குரை கழல்கள் நீட்டி’ என்ற
  பாசுரம். மற்றைப் பாசுரங்களையும் இங்ஙனமே கண்டுகொள்க.