முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
80

திருமேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமாய்விடுவதே! நம்பி மூத்த பிரானும் தானுமாக ஸ்ரீ மதுரையிற்போய்ப் புக்கவாறே கூனியைக் கண்டு, ‘அண்ணர்க்கும் நமக்கும் பூசலாம்படி சாந்து இட வல்லையோ?’ என்ன, 1வழக்கனாய் இருக்கிற சாந்தைக் கொடுத்தாள்; ‘இது உனக்காய் இருந்தது’ என்ன, அதற்குமேல் தரமாய் இருப்பது ஒன்றனைக்காட்டினாள்; ‘இது கம்சனுக்கு ஆம்’ என்ன, அதற்கு மேல் தரமாய் இருப்பது ஒன்றனைக்காட்டினாள்; ‘நிறமே இதில் கொள்ளக்கூடியது’ என்ன, இப்படி அருளிச்செய்தவாறே, ‘வெண்ணெய் நாற்றத்திலே பழகினார் இளம் பருவமுடையார் இருவர் சாந்தின் வாசி அறிந்தபடி என்?’ என்று, அதனால் வந்த உவகை தோன்றப் புன்முறுவல் செய்தாள்; ‘நல்ல சாந்து இடுக்கைக்காக இது ஒரு முகம் இருந்தபடி என்தான்!’ என்கிறான். ஆக, ‘நற்சரக்குப் பரிமாறுவார். அது கொண்டு பயன் கொள்ளுவார் உடம்பின் வாசி அறிய வேண்டுங்காண்; நம் அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் ஈடான சந்தனம் தா,’ என்று, இப்படித் தரம் இட்டுப் பூசப்படுகின்ற திருமேனி என்பதனைத் தெரிவிக்கும்பொருட்டு, 2 மேனி’ என வேண்டாது கூறுகிறார்.

(1)

356

3பூசும் சாந்துஎன்நெஞ்சமே; புனையும்கண்ணி எனதுடைய
வாசக கம்செய் மாலையே; வான்பட்டாடை யும்அஃதே;
தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டுஉமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.

_____________________________________________________

1. வழக்கன் - செலவுக்குத் தகுந்தது.

2. சாந்து பூசினான் என்றதனானே ‘மேனி’ என்பது தானே போதருமாதலின்,
  ‘மேனி’ என மிகைபடக் கூறவேண்டா; அங்ஙனம் மிகைபடக் கூறியதன்
  பயனைத் தெரிவித்தபடி. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 450 - ஆம்
  சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையை ஈண்டு நோக்குக.

3. ‘யாப்புச் செய்ய அலங்கலும் ஆடையும்
      எனது நெஞ்சுசெஞ் சாந்தம் இருகரம்
  கூப்புச் செய்கை அணியென்று கூறினன்
      குருகை யாளிமற் றார்வல்லர் கூறவே?’

  என்று தத்துவராய சுவாமிகள் அருமைத்திருவாக்கு இங்குச் சிந்தித்தல்
  தகும்.

(மோகவதைப் பரணி. 24.)