முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
82

காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும். 1சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ?

    வான் பட்டாடையும் அஃதே - அந்தச் சொற்கள்தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும். 2இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக்காணும்; ‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ? தேசமான அணிகலனும் - தனக்கு ஒளியை உண்டாக்குகிற ஆபரணமும். என் கைகூப்புச் செய்கையே - 3சேரபாண்டியன் தம்பிரானைப்  போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி. 4‘இவற்றாலே நிறம் பெற்றானாய் இருக்கிறவன்தான் ஒரு குறைவாளனாய் இருக்கின்றானோ?’ எனின், ஈசன் -சர்வேசுவரன் என்கிறார். ‘ஆயின், ‘இரட்சகன்’ என்னும் பெயரேயாய் உடைமை நோவுபட விட்டிருப்பவன் ஒருவனோ?’ எனின், ஞாலம் உண்டு உமிழ்ந்த -உலகத்திற்கு எல்லா வகையாலும் இரட்சகன் என்கிறார். எந்தை - அந்த இரட்சணத்தாலே என்னை அடிமை கொண்டவன். ஏகமூர்த்திக்கு - 5ஈடும் எடுப்பும் இல்லாததான திருமேனியையுடையவனுக்கு. ஏகமூர்த்திக்குப்

_____________________________________________________

1. ‘விஞ்சியிருத்தற்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘சாந்து’ என்று தொடங்கி, இதனால், வாக்கின்
  வாசனையே நெஞ்சிற்கும் வாசனை கொடுப்பது என்றாயிற்று.

2. ‘வாசகம் பட்டாடை ஆயினவாறு யாங்ஙனம்?’ என்ன, அதற்கு விடையைச்
  சிலேடையாக அருளிச்செய்கிறார், ‘இவருடைய பா’ என்று தொடங்கி. பா -
  செய்யுள்; நூலின் சேர்க்கை. நூல் -சாஸ்திரம்; இழை. ‘அடியிலே நோற்று
  நூற்றவர்’ என்றது.

  “கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் றன்னை
   வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.” 

  என்றதனைத் திருவுள்ளம் பற்றி. (திருவாய். 4. 5 : 10.) நூற்றல் - நூல்
  நூற்றல்; பிரபந்தத்தைச் செய்தல்.

3. சேரபாண்டியன் தம்பிரான் - நம்பெருமானுடைய திருப்பதக்கம்.

4. ‘இவற்றாலே’ என்று தொடங்கி மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார்.

5. சாந்து பூசுவது திருமேனியிலே யாகையாலே ‘மூர்த்தி’ என்ற சொல்லுக்குத்
  ‘திருமேனி’ என்று பொருள் அருளிச்செய்கிறார்.