முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
91

வளர

வளராது, பேர்வாமன் ஆகாக்கால் பேராளா!’ என்று வயிறு பிடித்தார்கள்? மாதவா - 1‘தீ நாள் திருவுடையார்க்கு இல்’ என்கிறபடியே, இந்த அபாயங்களில் அவன் தப்பியது அவள் நெஞ்சோடேயிருந்து நோக்குகையாலே அன்றோ? ஓர் அபாயமும் இல்லையேயாகிலும், பெரிய பிராட்டியாரும் அவனுமான சேர்த்திக்கு மங்களாசாசனம் செய்கின்றவர்கள் தேட்டமாய் இருக்கிறது காணும். அன்புடையவர்கள் ‘வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,’ என்னா நின்றார்கள் அன்றோ? பூத்தண் மாலைகொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும் - பூதனை முதலாயினோர் வந்து கிட்டின அவ்வக் காலத்திலே குளிர்த்தியையுடைத்தான பூ மாலையைக் கொண்டு குளிர்ந்த உபசாரத்தைச் செய்யப் பெற்றிலேனேயாகிலும். பூத்தண்மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே - குளிர்ந்த மாலையால் அல்லது செல்லாதபடியாய் ஆதி ராஜ்ய சூசகமான உன்னுடைய திருமுடிக்கு விரும்பிச் சார்த்தும் மாலை, என் உயிர் - என் சத்தையாய்விட்டது.

(4)

359

கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடிமுதலா
எண்ணில் பல்க லன்களும்; ஏலும் ஆடை யும்அஃதே;
நண்ணி மூவு லகும் நவிற்றும் கீர்த்தி யும்அஃதே;
கண்ணன் எம்பி ரான்எம்மான் கால சக்கரத் தானுக்கே.

    பொ-ரை : காலத்தை நடத்துகின்ற சக்கரத்தையுடையனான எம்மானும் எம்பிரானுமான கண்ணபிரானுக்கு, என்னுடைய உயிரானது

_____________________________________________________

1. ‘தீநாள் திருவுடையார்க்கு இல்’ என்றது, சிலேடை :
  செல்வத்தையுடையவர்க்கு என்பதும், பெரியபிராட்டியாரையுடையார்க்கு
  என்பதும் பொருள். 

  ‘இதுமன்னும் தீதென் றிசைந்ததூஉம் ஆவார்க்கு
  அதுமன்னும் நல்லவே யாகும் - மதுமன்னும்
  வீநாறு கானல் விரிதிரைத் தண்சேர்ப்ப!
  தீநாள் திருவுடையார்க்கு இல்.’

  என்பது பழமொழி நானூறு, 235.

  ‘நெஞ்சோடே இருந்து’ என்பதும் சிலேடை.

2. ‘மாதவா! பூத்தண்மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்’
  என்று மேலே கூட்டி வேறும் ஒரு கருத்து அருளிச் செய்கிறார், ‘ஓர்
  அபாயமும் இல்லையேயாகிலும்’ என்று தொடங்கி.