முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
98

வாராயாகிலும் - 1‘உபப்பிலாவியம் என்ற நகரத்திலிருந்து வந்தவரான ஸ்ரீ கிருஷ்ணன் குசஸ்தலம் என்கிற இடத்தில் தங்கியிருக்கிறார்; அவர் காலையில் இங்கு வருவார்,’ என்கிறபடியே, அங்குநின்றும் புறப்பட்டான், இங்கே வந்துவிட்டான் என்று வருகைக்குக் காரணம் இல்லையேயாகிலும். 2அன்றிக்கே, ‘கிருஷ்ணனுடைய திருப்பெயரை நினைவு ஊட்டுகின்ற திருச்சின்னத்தின் ஓசையானது குளிர்ந்திருக்கும்’ என்னக்கடவதன்றோ? என் சென்னிக்குக் கோலமாம். - 3‘ஸ்ரீராமபிரானுடைய திருவடிகள் என் தலையினால் தாங்குகின்றவரையில் எனக்குச் சாந்தி உண்டாக மாட்டாது’ என்று இருக்கின்ற என் தலைக்குக் கோலமாம். உன் கமலம் அன்ன - ‘செவ்விப்பூச் சூட வேண்டும்’ என்று ஆசைப்படுவாரைப் போலே. குரைகழல் - குரை என்று பரப்பாய், அதனாலே இனிமையின் மிகுதியைச் சொல்லிற்றாதல்; அன்றிக்கே, ஆபரணங்களின் ஒலியைச் சொல்லிற்றாதல். “வாராயாகிலும் கோலமாம்’ என்பான் என்?’ என்னில், ‘வாராது ஒழியக்கூடாது; கூடாதது கூடிலும் என் நினைவு இது,’ என்கிறார். 4என்னை அடியிலே இப்படி ஆக்கினாயே!’ என்பது கருத்து. அடிவிடில் ‘நின்னலால் இலேன்காண்’ என்பாரே!

(6)

361

குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா!
குரைக ழல்கை கூப்பு வார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டே னேலும்உன்
உரைகொள் சோதித் திருவுருவம் என்னது ஆவிமேலதே.

_____________________________________________________

1. ‘ஒன்றும்’ என்று விசேடித்ததற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
  ‘உபப்பிலாவியம்’ என்று தொடங்கி. இது, பாரதம் உத்தியோக பர்வம்.
  ‘ஒன்றும் வாராயாகிலும்’ என்றது, ‘நீ வருகைக்கு அறிகுறியாயிருப்பதோர்
  அடையாளம் ஒன்றும் உண்டாம்படி வாராயாகிலும்’ என்றபடி.

2. மற்றும், ஓர் அடையாளத்திற்கு மேற்கோள் காட்டுகிறார், ‘அன்றிக்கே’ என்று
  தொடங்கி. என்றது, ‘திருச்சின்னத்தின் ஒலியானது அவன் வரவுக்கு
  அடையாளமாக இருக்குமே? அது இல்லையேயாகிலும்’ என்றபடி.

3. ஸ்ரீராமா. அயோத். 98 : 8.

4. ‘உமக்கு இப்படி ருசியைப் பிறப்பித்தார் யார்?’ என்ன, ‘என்னை அடியிலே’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘அடியிலே’ என்றது,
  சிலேடை : ‘திருவடிகளிலே’ என்பதும், ‘ஆதிகாலத்திலே’ என்பதும்
  பொருளாம். ஆகையாலே, சத்தாபிரயுக்தம் என்கிறார், ‘அடி விடில்’ என்று
  தொடங்கி. ‘நின்னலால் இலேன்காண்’ என்ற இது, திருவாய்மொழி, 2.3:7.