முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
111

கிறாள். ஊரார் பழி கொண்டு காரியம் என்? உன் நெஞ்சிற் குறை இல்லாமையே அன்றோ எனக்கு வேண்டுவது என்கிறாள்.

(3)

468

    1ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்படுத்து
    ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
    பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
    காரமர் மேனிநம் கண்ணன் தோழீ! கடியனே?


    பொ-ரை :-
ஊரிலுள்ளவர்களால் பேசப்படுகின்ற அலராகிய எருவை இட்டு, தாயினால் பேசப்படுகின்ற நல்வார்த்தைகளாகிற தண்ணீரைப் பாய்ச்சி, அன்பாகிய நெல்லை விதைத்து அதனை முளைப்பித்த நெஞ்சமாகிய பெரிய வயலிலே, பொருந்திய பெரிய காதலைக் கடலைப் போலே உண்டாக்கிய மேகம் போன்ற திருமேனியையுடைய நம் கண்ணபிரான் கடியன் ஆவானோ? என்கிறாள்.

    வி-கு :-
முளைத்த - முளைப்பித்த. காதலைக் கடல் புரைய விளைவித்த கண்ணன் என்க. கடியனே என்ற ஏகாரம், கடியன் ஆகான் என்னும் பொருளையுடையது; எதிர்மறை.

    ஈடு :-
நாலாம் பாட்டு. 2“என்செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ஊரார் சொல்லும் பழியேயாய், அவன் தான் நமக்கு உடலானானோ அவர்கள் சொல்லும் பழி பொறுத்திருக்கைக்கு; ஆனபின்பு, அவன் கடியன்காண் என்றாள். ஏதேனும் ஒன்றைச் சொல்லியாகிலும் மீட்க வேணுமே அவளுக்கு, ‘அவன் அருள் அற்றவன்காண்’ என்ன; ‘கெடுவாய், நீ சொல்லும் வார்த்தையே இது,

____________________________________________________

1. ஊரவர் கவ்வை எருவாக அன்னைசொல்
  நீராக நீளும்இந் நோய்.

  என்ற திருக்குறளை இங்கு ஒப்பு நோக்குக.

2. “என்செய்யு மூரவர் கவ்வை” என்று, மேற்பாசுரத்தில் சொன்ன பின்பு,
  “கடியனே” என்ற எதிர்மறை ஏகாரத்தால் அவன் கடியன் அல்லன் என்று
  சொல்லுகைக்குக் காரணம் யாது? அது தோழி சொன்னது கொண்டு என்னில்,
  “தீர்ந்த என் தோழி” என்று இவள் அன்பினைக் கண்டு உகக்குமவள்
  “கடியன்” என்று சொல்லுகைக்குக் காரணம் யாது? அவன் முகம்
  காட்டாதிருக்க, ‘கடியன் அல்லன்’ என்று சொல்லக் கூடுமோ? கடியன்
  அல்லனாதலைச் சாதிக்கிற இவள்,