முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
115

ஆதல

ஆதலின், “முளைத்த” என்கிறது. 1“சரீர ஆரோக்யம் செல்வம்” என்னும் பொருளைத் தொடக்கமாகவுடைய 2சுலோகத்திலே சுகத்திற்குச் சாதனங்களையும் சொல்லி, அவற்றுக்குப் பலமான சுகத்தையும் தனித்துச் சொல்லி, இரண்டற்கும் பகவான் திருவருள் வேணும் என்று சொல்லியிருக்கிறதே அன்றோ. 3சிறியதைப் பெரியது நலியுமாறு போலே, ஒருவன் செய்த புண்ணியத்தினுடைய பலத்தை வேறு ஒருவன் பறித்துக்கொள்ளாமல், அப்புண்ணியத்தைச் செய்தவனே அநுபவிக்கும்படி செய்யும் போதும் அவன் திருவருள் வேணுமே.

    நெஞ்சப் பெருஞ் செய்யுள் - நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. 4கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள். ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி, ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி. பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த - பெரிதாய் அமர்ந்த காதல் ஆயிற்று. என்றது, ஊரார் சொல்லும் பழிக்கும் தாயாருடைய ஹித வசனத்துக்கும் மீளாதபடி

_____________________________________________________

1. சாதனம் இருப்பினும் சாத்திய சித்தி அவன் அதீனம் என்பதற்குப்
  பிரமாணம் காட்டுகிறார் ‘சரீர ஆரோக்கியம்’ என்று தொடங்கி.

2. “சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபக்ஷ ஜயஸ்ஸு கம்
  தேவி த்வத்திருஷ்டி திருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம்”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 125. இது, திருமகளைப் பார்த்து இந்திரன்
  துதிப்பது. இது, பிராட்டி விஷயமாயினும், பிராட்டிக்கும் ஈச்வரனுக்கும்
  உண்டான அபேதத்தைப் பற்ற, பிராட்டி விஷயமான இச்சுலோகம்
  இவ்விடத்திற்குப் பிரமாணமாகத் தட்டு இல்லை என்க.

3. சுகத்திற்கும் அவன் வேண்டும் என்பதற்குக் காரணம் யாது? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சிறியதை’ என்று தொடங்கி.

4. அணுவான நெஞ்சினை, “பெருஞ்செய்” என்னலாமோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘கலவியும் பிரிவும்’ என்று தொடங்கி. புடைபடுத்தி
  -விரிவாகச் செய்து.