முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
138

நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்” என்கிறபடியே, அவன் நாணமுற்று வந்து நிற்கிறபடியைக் கண்டு, ‘இவனையோ நாம் இவ்வார்த்தை சொன்னோம்’ என்று தாய்மார்கள் நாணமுற்றுக் கவிழ்தலை இடும்படியாக.

(8)

473

    நாணும் நிறையும் கவர்ந்துஎன்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
    சேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை
    ஆணைஎன் தோழீ! உலகுதோறு அலர் தூற்றிஆம்
    கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.

   
பொ-ரை :- என் தோழீ! ஆணை; என்னுடைய நாணத்தையும் நிறையையும் கவர்ந்து, நல்ல நெஞ்சினையும் அழைத்துக்கொண்டு மிக உயர்ந்திருக்கின்ற பரமபதத்திலே சென்று தங்கியிருக்கின்ற தேவபிரானை, உலகுகள் தோறும் அலரைத் தூற்றி என்னால் செய்யக்கூடிய மிறுக்குகளைச் செய்து அடங்காதவளாய் மடல் ஊர்வேன் என்கிறாள்.

    வி-கு :-
அலர்-பிறர் கூறும் பழமொழி. தூற்றுதல்-பலர் அறியச் செய்தல், குதிரி-தடையில்லாத பெண்; அடங்காதவள். ஊர்தும்: தனித்தன்மைப் பன்மை.

  “மடல் ஊர்தும்” என்றதனால், மடல் ஊராமை உணர்க.

    ஈடு :-
ஒன்பதாம் பாட்டு. 1நெஞ்சு விம்மல் பொருமலாகா நிற்கவும், தன் பெண்தன்மையாலே இதற்கு முன்பு மறைத்துக்கொண்டு போந்தாள்; இனி, ‘அவனை அழிக்கப் புகுகிற நாம், யார்க்கு மறைப்பது’ என்று அது தன்னையே சொல்லுகிறாள்.

    நாணும் நிறையும் கவர்ந்து-சத்தையோடு கூடி வருகின்ற நாணத்தையும் கொண்டான், 2களவு கலந்தால்

_________________________________________________

1. மேல் திருப்பாசுரங்களில் எல்லாம் மறைத்துப் பேசினவள் இப்போது
  “மடல் ஊர்தும்” என்பான் என்? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
  ‘நெஞ்சு’ என்று தொடங்கி. ‘விம்மல் பொருமல்’ என்பன, ஆற்றாமையால்
  வந்த மனத்தின் விகாரங்கள். அது தன்னையே-மடல் தன்னையே.

2. களவாகிறது, அகவாயில் ஓடுகிறதனை மறைத்தலாய், அது உள்ளது
  யௌவனத்திலேயாகையாலே, களவு என்பதனால் யௌவனத்தைச் சொல்லி,
  ‘களவு கலந்தால்’ என்றதனால், யௌவனம் குடிபுகுந்தால் என்பதனைத்
  தெரிவித்தபடி. சத்தை - ஆத்மா; அல்லது சொரூபம்.