முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
15

    ஈடு :- மூன்றாம்பாட்டு. 1“பொய்யே கைம்மை சொல்லி” என்றும், “சில கூத்துச் சொல்ல” என்றும் சொன்ன வார்த்தைகளை விவரித்துக்கொண்டு, இப்படி வார்த்தைகள் அளவிலேயே உன்னைப் பெற்ற நான் உன்னை ஒழிய வேறு ஒன்றனையும் ஆசைப்படேன் என்கிறார்.

    உள்ளன-மனத்தில் உள்ளபொருள்கள். மற்று உளவாவேறே சிலவாக இருக்க. என்றது, மனமானது உலக விஷயத்திலே ஈடுபாடு உடையதாக இருக்க என்றபடி. புறமே சில மாயம் சொல்லி-புறப்பூச்சாகச் சில பொய்களைச் சொல்லி. இதனால், மேற்பாசுரத்தில் “கூத்துச் சொல்ல” என்ற இடத்தைச் சொல்லுகிறார். வள்ளலே-பரமஉதாரனே! மணி வண்ணனே! - 2பெருவிலையனான இரத்தினம் போலே சிலாக்கியமான வடிவை எனக்கு உபகரித்தவனே! என்று என்றே-3மனத்தொடு படாமலே சொல்லா நிற்கச் செய்தேயும் ‘மனத்தொடு பட்டுச் சொல்லுகிறான்’ என்று தோற்றும்படியாகப் பலகாலும் சொல்லி, உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம்-4உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியும் முற்றறிவினனாய்ச்

_____________________________________________________

1. முதற் பாசுரத்திலே கூறிய “பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே
  ஆடி” என்றதனை இப்பாசுரத்திலேயுள்ள “மற்றுளவா” என்பதும்,
  இரண்டாம் பாசுரத்திலே கூறிய “சில கூத்துச் சொல்ல” என்றதனை
  இப்பாசுரத்திதேயுள்ள “புறமே சிலமாயம் சொல்லி” என்பதும்
  விவரிக்கின்றன என்று கொள்க. “சிலமாயம் சொல்லி” என்றதனை
  நோக்கி, ‘இப்படி வார்த்தைகள் அளவிலே’ என்றும் “உன்னைக்கண்டு
  கொண்டு உய்ந்தொழித்தேன்” என்றதனை நோக்கி, ‘உன்னைப் பெற்ற
  நான்’ என்றும், “உன்னை விட்டு” என்றதனை நோக்கி, ‘உன்னை ஒழிய’
  என்றும், “என் கொள்வன்” என்றதனை நோக்கி ‘வேறு ஒன்றனையும்
  ஆசைப்படேன்’ என்றும் அருளிச்செய்கிறார்.

2. “வள்ளலே” என்ற பதத்தையும் கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார் ‘பெரு
  விலையனான’ என்று தொடங்கி.

3. அடுக்குத் தொடருக்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘மனத்தொடுபடாமலே’
  என்று தொடங்கி.

4. உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன் றில்லா
  கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
  உள்ளுவார் உள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி என்று
  வெள்கிப்போய் என்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே:

  என்பது, திருமாலை.