முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
156

மடல

மடல் ஊர்வது என்கிறாள். 1சிலர் உறங்கச் சிலர் உணர்ந்திருக்கை அன்றிக்கே, எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள். 2திருவடி செல்லுகிற கணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று பழிசொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று. 3அன்றிக்கே, இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக்கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று எல்லோரும் ஒருசேர உறங்கினபடியைச் சொல்லிற்று ஆகவுமாம். நாக பாசத்தால் கட்டுண்ட அன்று ஒரு ஜாம்பவான், மஹாராஜர், திருவடி தொடக்கமானார் தாம் உணர்ந்திருந்தமை உண்டே அன்றோ; இங்கு அங்ஙனம் ஒருவர் இலராயிற்று. ஆக, பழி சொல்லுவாரோடு ஹிதம் சொல்லுவாரோடு உசாத்துணையாவாரோடு வாசி அற, எல்லோரும் ஒருசேர உறங்கினார்கள் என்கை. இதனால், என் சொல்லியவாறோ? எனின், பழி சொல்லி அலைப்பாருங்கூட இல்லாதபடி எல்லோரும் கூட உறங்குகையாலே, சிலருடன் உசாவிக் காலத்தைக் கழிக்க ஒண்ணாதபடியான நிலை பிறந்தபடி சொல்லுகிறது. ஊர் எல்லாம் உறங்கிற்றாகில், புறம்பேயுள்ள உலகத்திலே சென்றாகிலும் உசாத் துணையாவார் உளராகில் பார்த்தாலோ? என்னில், உலகு எல்லாம் நள் இருளாய் - பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று. நள் என்று, நடுவாதல், செறிவாதல்; நடுவான இருள், செறிவான இருள் என்றபடி. அன்றிக்கே, எல்லாப் பொருள்களினுடையவும் ஒலி அடங்கில் இராத்திரி தனக்கெனவே ஓர் ஒலி உண்டு; அதனைச் சொல்லுகிறதாதல். ஆக, கண்

____________________________________________________

1. “எல்லாம்” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘சிலர் உறங்க’
   என்று தொடங்கி.

2. பிரதிகூலர் அடைய உறங்கினதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘திருவடி
  செல்லுகிற’ என்று தொடங்கி.

3. “ஊர் எல்லாம்” என்றதற்கு, தாய்மார் தோழிமார் ஆகிய எல்லாரையும்
  சொல்லுகிறது என்று பொருள் கூறத் திருவுள்ளம் பற்றி, எல்லாரும் ஒருசேர
  உறங்கக் கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘அன்றிக்கே’
  என்று தொடங்கி. ஆக, “ஊர் எல்லாம்” என்றதற்கு, இரு பொருள்: ஒன்று,
  பிரதிகூலர் எல்லாரும் என்பது. மற்றொன்று, தாய்மார், தோழிமார் முதலிய
  எல்லாரும் என்பது. இரண்டாவது பொருளுக்கு ஒரு வேறுபாடு காட்டுகிறார்
  ‘நாகபாசத்தால்’ என்று தொடங்கி. நாகபாசத்தால் கட்டுண்ட
  -பிரஹ்மாஸ்திரத்தால் கட்டுப்பட்ட. இது, ஸ்ரீராமாயண சரிதை.