முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
159

வளவ

வளவில், ஆவி காப்பார் ஆர் - பிரளய ஆபத்தில் அகப்பட்டாரைப் போன்று ஆபத்தோடு கூடி இருக்கிற நான் காக்கவோ? 1“எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்கிறபடியே, ‘இவளுக்கு அவன் வேணும்’ என்று என் பேற்றுக்கு எனக்கு முன்னே நோவுபடுகிற தோழி காக்கவோ, ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ, பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ? எல்லே - என்ன ஆச்சரியம்! அன்றிக்கே, ‘எல்லே’ என்று தோழியை விளிக்கிறாள் ஆதல். 2மேலே, “அன்னையரும் தோழியரும்” என்று அவர்களும் உறங்கினார்கள் என்னாநிற்கச் செய்தேயும், தன் ஆபத்தே செப்பேடாக ‘இவ்வளவில் அவள் உணர்ந்திருக்கச் சம்பாவனை உண்டு’ என்று நினைத்து ‘எல்லே’ என்கிறாள். வல் வினையேன் - எல்லாரையும் காப்பாற்றுகின்றவனுமாய், உடம்போடு அணைந்தாரைப் பிரியாதவனுமாய் இருக்கிற அவன் வந்து உதவாதபடியாய் இருக்கிற மஹாபாவத்தைச் செய்தேன். 3வல்வினையேன் ஆவி-பிரிவே காரணமாக நூறே பிராயமாயிருக்கிற என்னுடைய உயிரை. 4‘பிரிவிற்குச் சிளையாத இது இனி முடியப் புகுகிறதோ’ என்று இருக்கிறாள். 5ரக்ஷகனானவன் வந்திலன், எனக்கு முன்னே தோழி நோவுபட்டுக் கிடந்தாள், இனி வேண்டாதவர்கள் ரக்ஷகர் ஆகவோ.

(1)

477

        ஆவிகாப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண்மூடி
        மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
        காவிசேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
        பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.

_____________________________________________________

1. திருவாய். 9. 9 : 5.

2. மேலே, “அன்னையரும் தோழியரும் துஞ்சுவரால்” என்றிருக்க, இங்கே,
  தோழியை விளித்தல் யாங்ஙனம்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘மேலே’ என்று தொடங்கி.

3. வல்வினையேன் ஆகையாலே நூறே பிராயமாய் இருக்கிற என்னுடைய
  என்றபடி.

4. நூறே பிராயம் என்று நிச்சயித்தல் எப்படி? என்ன, ‘பிரிவிற்குச் சிளையாத’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். சிளையாத - இளையாத.

5. “இனி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ரக்ஷகனானவன்’ என்று
   தொடங்கி.