முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
175

யரும் நீர் என்னை என்னாதே நீள் இரவும் துஞ்சுவர் - 1அன்னையரும் தோழியருமான நீங்கள், என்பட்டாய் என்னாதே, நீள் இரவும் துஞ்சுதிர் என்று சொல்லுவாரும் உளர். அன்றிக்கே, அன்னையரும் தோழியரும் இது ஒரு நீர்மை இருக்கும்படியே! என்னே! என்னாமல், நீள் இரவும் துஞ்சுவார்கள் என்னுதல். என்றது, அவன், தன்னைப் போகட்டுப் போய் வேறு சிலவற்றால் போது போக்தித் தன்னை நினையாமலே இருக்கச் செய்தேயும், தான் அவனை ஒழியப் போது போக்கமாட்டாதே இருப்பதே! இது ஒரு நீர்மையே! என்னே ஆச்சரியம்! என்று இப்படிச் சொல்லாமல் தூங்குவர்கள் என்றபடி. 2“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு” என்புழிப் போன்று, ஈண்டும் ‘நீர்’ என்பது, நீர்மை என்ற பொருளில் வந்தது. எனக்கு உறங்காமையே தன்மையாம்படி, நெடிதான இரவு முழுதும் அவர்களுக்கு உறங்குகையே தன்மையாய் விட்டது என்பாள்  ‘நீள் இரவும் துஞ்சுவர்’ என்கிறாள்.

    கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் - ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவையுடையனுமாய், 3“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்” என்கிறபடியே, முன்பு உதவிப்போந்தவனும் வருகின்றிலன்.

___________________________________________________

1. “அன்னையரும் தோழியரும் நீர் என்னை என்னாதே துஞ்சுவர்”
   என்பதற்கு, இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார் முதற்பொருள்,
   அன்னையரும் தோழியருமான நீங்கள் என்னே என்னாமல் நீள் இரவும்
   தூங்குகின்றீர்கள் என்பது. நீர் - நீங்கள். என்னை - என்னே! இரண்டாவது
   பொருள், அன்னையரும் தோழியருமான அவர்கள் இது ஒரு நல்ல சுபாவம்
   இருக்கும்படியே! என்னாமல், நீள் இரவும் தூங்குவார்கள் என்பது. நீர் -
   நீர்மை. முதற்பொருளில், முன்னிலைப்பெயர். இரண்டாவது பொருளில்,
   பண்புப்பெயர். இவ்விருவகைப் பொருள்களையும் முறையே
   அருளிச்செய்கிறார் ‘அன்னையரும்’ என்று தொடங்கி.

2. “நீர்” என்பது, நீர்மை என்ற பொருளில் வருவதற்கு மேற்கோள்
   காட்டுகிறார் “நிறைநீர” என்று தொடங்கி. இது, திருக்குறள், 782.

3. “நம்” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘அந்தக் கோப
   ஸ்திரீகளுக்கு’ என்று தொடங்கி.

  “தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம்புஜ:
   பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத:”


  என்பது, ஸ்ரீ பாகவதம், 10 : 32.