முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
176

1

1“தாஸாம்-அந்தப் பெண்களுக்கு.” என்றது, அவர்கள் பூர்வ அவஸ்தையைப் பற்றியே அன்றோ. பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள். பேர் என்னை மாயாதால் - அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும். 2அவன் வருகின்றிலன், இது போகிறதில்லை. 3நான் காரியத்திலே முடிந்தேனாயிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப்பெயர் என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை. 4ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று அவர் தமக்கும் சத்தைக்கு ஏதுவானபடி. 5அடியுடைய பெயர் ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே. இதனுடைய அடியுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது. பேர் என்னை மாயாதால் - பெயர் அளவில் நிற்கின்றவள் ஆனேன் என்றபடி. வல்வினையேன் - நான் முடியச்செய்தேயும் என்னை முடித்தேன் ஆகாதபடி செய்யும்படியான பெயரைப் படைக்கக்கூடிய மஹாபாவத்தைச் செய்தேன். பின்நின்று - நான் முடியச் செய்தேயும் இப்பெயரானது எனக்குப் பின்னும் நின்று முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை. 6வருகிறபோது ஒருசேர வந்தால், போகிறபோதும் ஒருசேரப் போக வேண்டாவோ.

_____________________________________________________

1. அவன் உதவும்படி அவர்களுக்குத் துன்பம் உண்டோ? என்ன, ‘தாஸாம்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. அவனோடு ஒத்திருக்கையாவது எப்படி? என்ன, அதற்கு விடை அருளிச்
  செய்கிறார் ‘அவன் வருகின்றிலன்’ என்று தொடங்கி.

3. போகாமல் செய்கிறதுதான் யாது? என்ன, ‘நான் காரியத்திலே’ என்று
  தொடங்கி விடை அருளிச்செய்கிறார்.

4. “பேர் என்னை மாயாதால்” என்றதற்கு, சுவாபதேசப்பொருள்
   அருளிச்செய்கிறார் ‘ஆழ்வாருடைய திருநாமம்’ என்று தொடங்கி.

5. தம்முடைய திருநாமம் தம்முடைய சத்தைக்கும் காரணமாயினவாறு
  யாங்ஙனம்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அடியுடைய’ என்று
  தொடங்கி. அடியுடைய பெயர் - திருவடிகளினுடைய பெயர்; சடகோபன்
  என்பது. பாக்கியமுடைய பெயர் என்பது வேறும் ஒரு பொருள். இதனுடைய
  - ஆழ்வார் திருநாமத்தினுடைய.

6. தான் போனால் பெயர் நிற்க ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘வருகிறபோது’ என்று தொடங்கி.