முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
194

தாய் விட்டது, காக்கின்றவனும் தோன்றுகின்றிலன், என் மனத்தின் துன்பத்தை இனிப் போக்குவார் யார்? என்கிறாள்.

    வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் - இராவணன் மாரீசனைத் துணையாகக் கொண்டு வந்து தோற்றினாற் போலே ஆயிற்று, நுண்ணிய துளியோடே செறித்த இருள் வந்து தோன்றினபடி. 1இரண்டும் இன்பத்திற்கு ஏகாந்தமாய் இருப்பன அன்றோ, “ஒழுகு நுண் பனி” என்கிறபடியே, கார்காலத்தில் கைக்குள்ளே அடங்க அணைக்க வேணும். இருள்தானே போகத்தை வளர்ப்பதே அன்றோ. அதற்குமேலே, வளர்ந்த 2இருளும் நுண்ணிய பனியும், வெவ்விய சுடரிற் காட்டில் அடா நின்றது என்னுதல். வெவ்விய சுடர் போலே அடா நின்றது என்னுதல். 3இவற்றில் பிரதானம் யாது? என்னில், அது வேணுமோ, ‘பாதகங்கள் இரண்டு உண்டு’ என்ன அமையாதோ. இனி, இத்திருவாய்மொழியில் சொல்லுவது, இரவின் துன்பமே அன்றோ; ஆன பின்னர், இருளுக்கே முதன்மை சொல்லிற்றாகக் கோடலும் அமையும். அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்-தன்னுடைய தோற்றரவிலே துன்பங்களை எல்லாம் போக்குதலையுடைய அழகிய சுடர் பொருந்திய சூரியனும்

_____________________________________________________

1. போகத்தை வளர்ப்பது ஆகையாலே “இருள்” பாதகமாம்; “துளி” பாதகம்
  ஆமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இரண்டும்’ என்று
  தொடங்கி. துளியும் போகத்தை வளர்ப்பது என்பதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார் ‘ஒழுகு நுண்பனி’ என்று தொடங்கி.

  முழுதிவ் வையகம் முறைகெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி
  மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
  ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை அடங்கஅம் சிறைகோலித்
 
      தழுவு நள்ளிருள் தனிமையின் கடியதொர் கொடுவினை அறியேனே
  என்பது, பெரிய திருமொழி 8. 5 : 8. இத்திருப்பாசுரத்திற்குக் கருத்து,
  ‘கார்காலத்தில்’ என்று தொடங்கும் வாக்கியம்.

2. “இருளின்” என்பதில், ‘இன்’ சாரியை. “சுடரில்” என்பதில், இல் என்பது,
  ஐந்தாம் வேற்றுமை உழற்பொரு, ‘சுடர்போல’ என்ற பொருளில், ஒப்புப்
  பொருள்.

3. இரண்டு பொருள்களைச் சொல்லுகையாலே, ‘இவற்றில் பிரதானம் இன்னது’
  என்கைக்காகப் பொதுவான சங்கையை அநுவதித்துப் பரிஹரிக்கிறார்
  ‘இவற்றில்’ என்று தொடங்கி.