|
447
447
கண்ண பிரானை விண்ணோர்
கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன்
நடுவேஓர் உடம்பி லிட்டுத்
1திண்ணம்
அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து
என்னைப் போரவைத்தாய் புறமே.
பொ-ரை :-
கண்ணபிரானாக
அவதரித்தவனும், விண்ணோர்கட்குக் கருமாணிக்கம் போன்றவனும், அமுதமயமாயவனுமான உன்னைச் சேர்ந்தும்
சேராதவனாக இருக்கின்றேன்; என்னை? எனின், என்னை நடுவே ஓர் உடம்பிலே சேர்த்து, செய்யப்பட்டவைகளான
கொடிய பல வினைகளாகிற கயிற்றால் இறுக அழுந்தக் கட்டிப் புண்கள் தோன்றாதவாறு வரிந்து புறத்திலே
போர வைத்திட்டாயே என்கிறார்.
வி-கு :-
இட்டு அழுந்தக் கட்டி மறைய வரிந்து புறமே வைத்தாய் என்க. வரிந்து - மேல்பூச்சுப்பூசி.
போர-மிகவும்.
ஈடு :-
ஐந்தாம்பாட்டு. ‘நீர் “மலினம்” என்கிறது எதனை?’ என்ன, 2இன்னதனை என்கிறார்.
விண்ணோர் கருமாணிக்கத்தைக்
கண்ணபிரானை - 3“அந்தப் பரமபதத்தில் மேதாவிகளும், துதித்துக்கொண்டிருத்தலையே
இயல்பாகவுடையவர்களும், எப்பொழுதும் ஜாக்கிரதையோடு கூடினவர்களாய்க் கொண்டு பிரகாசிக்கிறார்கள்”
என்கிறபடியே, நித்தியசூரிகளுக்கு அநுபவிக்கக் கூடியதான வடிவழகை எனக்குக் கொடுப்பதற்காகக்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை. அமுதை - இப்படி அவதரித்துத் தன்னுடைய இனிமையை ஆயிற்று
இவரை அநுபவிப்பித்தது. நண்ணியும் நண்ணகில்லேன் - பெற்று வைத்தே பெறாதார் கணக்கானேன்.
_____________________________________________________
1. என்பினை நரம்பிற்பின்னி
உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப்
போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயிலாக்கி ஊன்பயில்
குரம்பை செய்தான்
மன்பெருந் தச்சன் நல்லன்
மயங்கினார் மருள என்றான்.
என்பது, சிந். 1577.
2. ‘இன்னதனை’ என்றது,
“நடுவே ஓர் உடம்பில் இட்டு” என்பது
போன்றவைகளைக் கடாக்ஷித்து.
3. “தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம் ஸஸ்ஸமிந்ததே” இது,
இருக்குவேதம்.
|