முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
227

திருக்குறுங்குடி நம்பியை. நான் கண்டபின் - 1பழி புகழாம்படி இவ்விஷயத்திலே மூழ்கிய நான் கண்டபின். என்றது, ‘பழி’ என்று அச்சம் உறுத்தி மீட்க ஒண்ணாதபடி மூழ்கிய நான் கண்டபின் என்றபடி. கோல நீள் கொடி மூக்கும் - அழகு மிக்க கொடி போலே இருக்கிற திருமூக்கும், தாமரைக் கண்ணும் - 2அதன்படியேயாய் இருக்கிற தாமரை போன்ற திருக்கண்களும், 3அந்தக் கொடி பூத்தாற் போலேயாயிற்றுத் திருக்கண்கள் இருப்பது. கனிவாயும் - அது ஒரு பலத்தை உண்டாக்கினாற்போலே இருக்கிற கனிவாயும், நீல மேனியும் - அத்தாமரையின் இலைபோலே நீலமாய் இருக்கிற திருமேனியும், நான்குதோளும் - ஒரு பெருவெள்ளம் போலே ஆயிற்றுத் திருமேனி, 4அதனை நீந்துகைக்குச் சில தெப்பங்கள் போலே இருக்கிற திருத்தோள்கள் நான்கும், என் நெஞ்சம் நிறைந்தனவே-உங்கள் ஹிதவசனங்கட்கெல்லாம் என் நெஞ்சில் இடம் இல்லை.

(6)

493

    நிறைந்த வன்பழி நம்குடிக்குஇவள் என்று அன்னை காணக்கொடாள்
    சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
    நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும்
    நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமிஅம் கைஉளதே.

____________________________________________________

1. ‘பழி’ என்று சொன்னால் மீள ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘பழிபுகழாம்படி’ என்று தொடங்கி.

2. ‘அதன்படியேயாய் இருக்கிற’ என்றது, “கோலநீள் தாமரைக்கண்” என்றபடி.
  ‘அது’ என்று சுட்டு, “கோலநீள்” என்பதனைச் சுட்டுகிறது.

3. முன்னே கூறியதற்கு, ரசோக்தியாக, பாவம் அருளிச்செய்கிறார் ‘அந்தக்
  கொடி’ என்று தொடங்கி.

4. அதனை-அந்த வெள்ளத்தை.