முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
237

வருந்துவாள். என்று அன்னையரும் முனிதிர்-1ஊரவர் கவ்வைக்கு நான் வெறுக்கிறது என்?

    மை கொள் மாடம்-பழைமையாலே யாதல்; 2“ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலேயாதல். நான் கண்டபின்-அம்மாடத்தைப் போன்று 3நைவுக்குப் பழையேனான நான் கண்டபின்; 4“நைவாய எம்மேபோல்” என்னக் கடவதன்றோ. செய்ய தாமரைக் கண்ணும்-தனக்கே உரிமையாக்குகின்ற திருக்கண்களும், அல்குலும் - அந்த நோக்குக்குத் தோற்றார் தரித்து இளைப்பாறும் அல்குலும், சிற்றிடையும் - 5இரண்டும் ஒரு தொடையாயிருக்கையாலே ஊஹிக்கப்படும் இடையும், வடிவும்-என்னை மீள ஒட்டாத வடிவும், 6மெய்யே மீள ஒட்டுகிறது இல்லைகாணும் இவளை. மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் - காட்சிக்கு இனியதாய், கண்டார்க்கு ஒரு காலும் மறக்க ஒண்ணாதபடி இருக்கிற திருக்குழலானவை தாழ்ந்து, அணைக்கைக்குத் தகுதியான திருத்தோள்களும், பாவியேன் முன்நிற்குமே - 7அநுபவத்திற்குத் தகுதியில்

_____________________________________________________

1. “அன்னையரும்” என்ற உம்மைக்குப் பொருள் அருளிச்செய்கிறார்
  ‘ஊரவர் கவ்வைக்கு’ என்று தொடங்கி.

2. “ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.

3. மேலே அருளிச்செய்த ‘பழைமையாலேயாதல்’ என்றதனைக் கடாக்ஷித்து,
  ‘நைவுக்குப் பழையேனான’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

4. நைவுக்குப் பழையளோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘நைவாய’ என்று தொடங்கி. இது திருவாய். 2. 1 : 6.

5. ‘இரண்டும் ஒரு தொடையாயிருக்கையாலே’ என்றது, மேலும் கீழும்
  சேர்ந்திருப்பதனாலே என்றபடி.

  நுண்டுகில் அகலல்குல் நொசித்த வெம்முலை
  உண்டிவண் நுசப்பென உரைப்பி னல்லது
  கண்டறி கிலாஇடை காம வல்லியாழ்
  கொண்டவர் குழாத்திடைக் கொடியின் ஒல்கினாள்.

  என்ற சிந்தாமணிச் செய்யுள் இங்கு நினைவிற்கு வருகின்றது. (செய். 654).

6. ‘மெய்யே’ என்றது, சிலேடை: திருமேனியும், சத்தியமும்.

7. முன்னே நிற்கை நல்லது அன்றோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அநுபவத்திற்கு’ என்று தொடங்கி.