முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
242

    வழு இல் கீர்த்தி - குறைவற்ற கீர்த்தியையுடைய. நான்-அக்கீர்த்திக்குப் பிரிந்து நிலைபெறுதல் இல்லாதது போன்று, அவனை ஒழியத் தனித்து நிலைபெறுதல் இல்லாத நான். கண்ட பின் -இவர்க்கு இப்போது காட்சியாவது தான் ஏது? என்னில், அடியில், 1‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி 2‘முனியே நான்முகனே’ என்ற பாசுரம் அளவும் செல்ல 3ஒரே வாக்கியமே அன்றோ, நடுவில் உள்ளவை அநுபவப் பிரகாரங்களாலே பிறக்கிற விசேடங்களே அன்றோ. குழுமித் தேவர் குழாங்கள் கைதொழ - திரள் திரளான நித்தியசூரிகள், கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கைகோத்துக்கொண்டு இழியும்படி. சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-4“ஒளிகளின் திரள்” என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது. என் நெஞ்சுள் எழும் - நித்திய சூரிகள் நடுவே தோன்றுமாறு போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது. ஆர்க்கும் அறிவு அரிது - 5எனக்கு மறக்க ஒண்ணாதாப்போல ஆயிற்று, தம் முயற்சியால் அறிவார்க்கும் அறிய ஒண்ணாதிருக்கிறபடியும்.

(10)

497

    அறிவரிய பிரானை ஆழி அம்கையனையே அலற்றி
    நறிய நன்மலர்நாடி நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன
    குறிகொள் ஆயிரத்து ளிவைபத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
    அறியக் கற்றுவல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத் துள்ளே.

_____________________________________________________

1. திருவிருத்தம், 1.

2. திருவாய். 10. 10 : 1.

3. ‘ஒரே வாக்கியம்’ என்றது, ‘மானச அநுபவம்’ என்ற ஒரே வாக்கியம்
  என்றபடி. ஆனால், “பெற்றொழிந்தேன்”, “கண்டுகொண்டொழிந்தேன்” என்று
  சொன்னதற்கு, பாவம் யாது? என்ன, ‘நடுவில் உள்ளவை’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. “தேஜஸாம் ராயிமூர்ஜிதம்”
  இது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 9:67.

5. “ஆர்க்கும் அறிவரிதே” என்பதற்கு, அவதாரிகையில் அருளிச்செய்த
   பொருளேயன்றி வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘எனக்கு மறக்க’
   என்று தொடங்கி.