முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
250

ஆக

ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறியமாட்டாமல், ‘சர்வேச்வரன் ஆவேசித்தாற்போலே இராநின்றது’ என்று, திருத்தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

498

        கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
            கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
        கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
            கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
        கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
            கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
        கடல்ஞாலத் தீர்க்கிவை என்சொல்லுகேன்?
            கடல்ஞா லத்து என்மகள் கற்கின்றவே.

    பொ-ரை :- கடலோடு கூடின உலகத்தைப் படைத்தவனும் யானே என்பாள், இந்த உலகமாக இருப்பவனும் யானே என்பாள், இந்த உலகத்தை அளந்துகொண்டவனும் யானே என்பாள், இந்த உலகத்தைப் பிரளயத்தினின்றும் ஒட்டு விடுவித்து மேலே கொண்டு வந்தவனும் யானே என்பாள், இந்த உலகத்தை எல்லாம் பிரளய காலத்தில் புசித்தவனும் யானே என்பாள், உலகத்திற்கெல்லாம் தலைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? இந்த உலகத்திலே என்மகள் சொல்லுகின்றவற்றை, இந்த உலகத்தீரான உங்களுக்கு எதனைச் சொல்லுவேன்? என்கிறாள்.

    வி-கு :- ‘கடல்ஞாலம் செய்தேன்’ என்பதில், ஞாலம் என்பது, ஆகுபெயர். ஏறுதல்-ஆவேசித்தல். கொலோ என்பது, ஐயப்பொருள். ‘கொலோ’ என்பது, ‘சம்சய உக்தி அன்று, காணுங்கோள் என்று நிர்ணயித்துச் சொல்லுகிறாள்’ என்பர் வியாக்யாதா. “கொல்லே ஐயம்” என்பது, தொல்காப்பியம்.

    இத்திருவாய்மொழி, எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

    ஈடு :- முதற்பாட்டு. 1என்மகள், உலகத்தைப் படைத்தல் முதலான செயல்களை எல்லாம் செய்தேன் நானே என்னா நின்றாள்; எம்பெருமான் தன்பக்கல் ஆவேசித்துச் சொல்லுகிறாள் போலே இராநின்றது என்கிறாள்.

_______________________________________________

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.