முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
254

நாங்கள் பின்னர் நிர்ணயிக்கும்படி என்? நாங்கள் தெளியும்படி நீயே சொல்லாய்’ என்ன, கடல் ஞாலத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் - 1“வைகுந்தத்து அமரர்” என்னுமாறு போன்று, நித்திய சம்சாரிகளாய், பகவத்விஷயம் புதியது உண்டறியாதே போருகிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்? கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே-நித்தியசூரிகள் சொல்லக்கூடிய வார்த்தைகளை என் மகள் சம்சாரத்திலே இருந்து சொல்லுகிற இதற்கு நான் எதனைச் சொல்லுவது? இவைதாம், நித்தியசூரிகள் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஆதலின், ‘ஞாலத்து என்மகள் கற்கின்றவே’ என்கிறாள்.

(1)

499

    கற்குங் கல்விக்கும்எல்லை இலனே என்னும்
            கற்கும் கல்விஆவேனும் யானே என்னும்
        கற்கும் கல்விசெய்வேனும் யானே என்னும்
            கற்கும் கல்விதீர்ப்பேனும் யானே என்னும்
        கற்கும் கல்விச்சாரமும் யானே என்னும்
            கற்கும் கல்வி நாதன்வந்து ஏறக்கொலோ?
        கற்கும் கல்வியீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
            கற்கும் கல்வி என்மகள் காண்கின்றவே.

   
பொ-ரை :- கற்கப்படுகின்ற கல்விக்கு எல்லையை உடையேனல்லேன் என்னா நின்றாள், கற்கும் கல்வியாக இருப்பேனும் யானே என்பாள், கற்கும் கல்வியை உண்டாக்குகின்றவனும் யானே என்பாள், கற்கும் கல்வியினுடைய தாத்பர்ய அர்த்தத்தை அறுதியிடுகின்றவனும் யானே என்பாள், கற்கும் கல்வியினுடைய சாரமாகிய மந்திரங்களும் யானே என்பாள், கற்கும் கல்வியினாலே சொல்லப்படுகின்ற சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? பகவத்விஷயம் என்றால் இன்று கற்க வேண்டியிருக்கிற உங்களுக்கு, இன்று வார்த்தை கற்கும்படியான பருவத்தையுடைய என்மகள் கண்டு சொல்லுகின்றவற்றை என் சொல்லுவேன்?

    ஈடு :-
இரண்டாம் பாட்டு. எல்லாக் கல்விகளால் அறியப்படுதலும் அக்கல்விகளைப் பரப்புதல் முதலான செயல்களும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

____________________________________________________

1. “வைகுந்தத்து அமரர்’ என்னுமாறு போன்று” என்றது, பரமபதத்தை
   இருப்பிடமாகவுடைய நித்தியசூரிகள் என்று விசேடித்துக் கூறியது போன்று
   என்றபடி.