முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
258

இட

இட்ட வழக்கு என்னாநின்றாள். காண்கின்ற 1இக்காற்று எல்லாம் யானே என்னும் - பரிசம்கொண்டு அறியும்படி இருக்கிற காற்றும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்-காண்பார்க்குக் கண்டதாகத் தலைக்கட்ட முடியாதபடியான கடல் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.

    காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ-காணப்புக்கால் கண்டதாக மீள ஒண்ணாதபடியான கடல் போலே சிரமஹரமான வடிவையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் - நீங்களும் என்னைப் போன்று காணாநின்றீர் கோளாகில், உங்களுக்கு நான் என்ன பாசுரமிட்டுச் சொல்லுவது; 2சொல்ல ஒண்ணாமைக்கு உங்களோடு என்னோடு வாசி உண்டோ? 3காண்கின்ற என் காரிகை செய்கின்றவே - “வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாதபடி எந்தப் பரம்பொருளிடமிருந்து திரும்புகின்றனவோ” என்கின்ற அளவிட்டு அறிய முடியாத விஷயத்தை உட்புக்குப் பேசுகின்ற என் பெண்பிள்ளை செய்கிற இதனை நான் சொல்லுவது என்?

(3)

501

        செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
            செய்வான்நின் றனகளும் யானே என்னும்
        செய்துமுன் இறந்தவும் யானே என்னும்
            செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்
        செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
            செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
        செய்ய உலகத்தீர்க் கிவைஎன் சொல்லுகேன்?
            செய்ய கனிவாய் இளமான் திறத்தே.

_____________________________________________________

1. தரித்திருப்பதற்குக் காரணமாய் அண்மையிலிருத்தலை நோக்கி, “இக்காற்று”
  என்கிறாள்.

2. ஆனாலும், எங்களைக்காட்டிலும் நீ அந்தரங்கமானவள் அல்லையோ?
  உன்னால் சொல்ல ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘சொல்ல ஒண்ணாமைக்கு’ என்று தொடங்கி.

3. காண்கின்ற என் காரிகை - சாக்ஷாத்கரித்த என் பெண்பிள்ளை.