முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
265

504

504

    உற்றார்கள் எனக்குஇல்லை யாரும் என்னும்
            உற்றார்கள் எனக்குஇங்கு எல்லாரும் என்னும்
        உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
            உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
        உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
            உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
        உற்றீர்கட்கு என்சொல்லிச் சொல்லு கேன்யான்?
            உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.


    பொ-ரை :-
எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பாள், இங்கு எல்லாரும் எனக்கு உறவினர்களே என்பாள், உறவினர்களை உண்டாக்குகின்றவனும் யானே என்பாள், உறவினர்களை அழிக்கின்றவனும் யானே என்பாள், உறவினர்களுக்குப் பொருந்தியவனும் யானே என்பாள், உறவினர்கள் ஒருவரும் இல்லாத மாயனாகிய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? இங்கு வந்து சேர்ந்திருக்கின்ற உங்களுக்கு, என்னுடைய பேதைப்பருவத்தையுடைய மகள் பொருந்தி உரைக்கின்ற வார்த்தைகளை எதனைச் சொல்லுவேன்?

    ஈடு :-
ஏழாம் பாட்டு. எம்பெருமான் அடியார்கள் விஷயத்தில் இருக்கிற இருப்பைத் தன் படியாகப் பேசா நின்றாள் என்கிறாள்.

    எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை என்னும்-1எனக்கு ஒருகாரணம் பற்றி வந்த பந்துக்கள் ஒருவரும் இலர் என்னும். அன்றிக்கே, என்னுடைய சம்பந்தம் அறிந்து என்னோடு சிநேகிக்கக்கூடியவர் ஒருவரும் இலர் என்னும் என்னுதல். 2“உலகங்கட்கு எல்லாம் தலைவன்” என்று இதனை ஓதிவைத்தே வேறு தெய்வங்களை வணங்குதல் அன்றோ செய்வது. எனக்கு உற்றார்கள் இங்கு எல்லாரும்

____________________________________________________

1. “எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை” என்பதற்கு, இரு வகையாகப்
   பொருள் அருளிச்செய்கிறார். இரண்டாவது வகையில் உற்றார் -
   உற்றிருப்பார் என்றாய், சிநேகம் செய்வார் என்பது பொருளாகக் கொள்க.

2. சம்பந்தம் அறிந்து சிநேகம் செய்யார்களோ? என்ன, ‘உலகங்கட்கெல்லாம்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

 
“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்” என்பது,
   தைத்திரீய நாரா.