முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
274

என

என்று மோக்ஷம் முடிவாகத் தன்னுடைய காரியம் என்கிறாள். கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-நாடகம் கட்டி ஆடுவாரைப் போலே தேவனாகவும், மனிதனாகவும், இப்படிப் பல வகையான சரீரங்களை மேற்கொள்ளுகிற ஆத்மாக்களும் யானே என்னும். அன்றிக்கே, கோலம் கொள் உயிர்கள் - 1ஞான ஆனந்த லக்ஷணமான உயிர்கள் என்னுதல். கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் - 2இவற்றிற்கெல்லாம் காரணமான மூலப்பகுதியும் யானே என்னும். அன்றிக்கே, சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல். அன்றிக்கே, விசித்திர காரிய காரிணியான மூலப்பகுதியையும் சங்கல்பரூப ஞானத்தையும் பிரகாரமாகவுடையனாய், எல்லா நற்குணங்களையுமுடையனான சர்வேச்வரன் என்னுதல். கோலம் கொள் முகில்வண்ணன் - திருமேனிக்கு மேகத்தை ஒப்பாகச் சொல்லும்போது அலங்கரித்துச் சொல்லவேணுமாதலின் ‘கோலம் கொள் முகில்’ என்கிறது. மின்னி முழங்கி வில்லிட்டு வந்து தோற்றின போதாயிற்று ஒப்பாகச் சொல்லலாவது. கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் - ‘கேட்கவேணும்’ என்று ஒருப்பட்டிருக்கிற உலகத்தீர்க்கு நான் எதனைச் சொல்லுவது. அன்றிக்கே, மயிரும் உகிரும் பேணி, உடம்பு பேணி வந்து அலங்கரித்துக்கொண்டு நிற்கிற உங்களுக்கு என்னுதல். கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கு-அழகிய மாலையையும் மயிர்முடியையுமுடைய என் மகளுக்குப் பிறந்த அவஸ்தைகளை. என்றது, இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுகிற பாட்டைத் தான் பட்டு அநுகரித்துச் சொல்லுகிறவற்றை நான் எதனைச் சொல்லுவது என்றபடி.

(10)

_____________________________________________________

1. “கோலம்” என்பதற்கு இருபொருள். இரண்டாவது பொருள், அழகு
   என்பது, ஆத்மாவிற்கு அழகாவது. ஞான ஆனந்தங்களேயாதலின்,
   அதனை அருளிச்செய்கிறார் ‘ஞான ஆனந்தலக்ஷ்ணமான’ என்று தொடங்கி.


2. “கோலம்கொள் தனிமுதல் யானே என்னும்” என்பதற்கு, மூன்று வகையாகப்
   பொருள் அருளிச்செய்கிறார் ‘இவற்றிற்கெல்லாம்’ என்று தொடங்கி.
   இவற்றிற்கெல்லாம் - இந்த உலகங்கட்கெல்லாம். மூலப் பகுதிக்கும்,
   சங்கல்பரூப ஞானத்துக்கும் கோலமாவது யாது? எனின், விசித்திரமான
   காரியத்திற்குக் காரணமாயிருத்தல் என்க.