முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
279

பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர, பிராட்டிமாரோடும் 1நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான்மேலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார். இவர்தாம் 2என்கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான், காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.

509

        நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும்
            இனிஉன்னைவிட் டொன்று
        ஆற்றகிற் கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
            சேற்றுத் தாமரை செந்நெலூடுமலர் சிரீவர மங்கலநகர்
        வீற்றிருந்த எந்தாய்! உனக்குமிகை அல்லேன் அங்கே.


    பொ-ரை :- செய்த கர்மயோகத்தையுடையேனல்லேன், ஞான யோகத்தையுடையேனல்லேன், அப்படியானாலும், இனி உன்னைப் பிரியச் சிறிதுபொழுதும் பொறுக்கமாட்டுகின்றிலேன்; ஆதிசேஷசயனத்தையுடைய அம்மானே! சேற்று நிலங்களிலே தாமரைகள் செந்நெற்பயிர்களுக்கு மத்தியில் மலர்கின்ற ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தில் வீற்றிருக்கின்ற எந்தையே! காப்பாற்றுகின்ற உனக்கு அங்கே புறம்பு அல்லேன்.

    வி-கு :-
அம்மானே! எந்தாய்! நோன்பிலேன், நுண்ணறிவிலேன், ஆகிலும் உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன், உனக்கு அங்குமிகை அல்லேன் என்க. ஒன்றும் - சிறிதும். கில்: ஆற்றலையுணர்த்தும் இடைச்சொல். கிற்கின்றிலேன் - ஆற்றலையுடையேனல்லேன். வீற்றிருந்த : காலமயக்கம்.

    இத்திருவாய்மொழி ஆசிரியத்துறை.

____________________________________________________

1. ‘நித்திய பரிகரத்தோடும்’ என்றது, இத்திருவாய்மொழியில் வருகின்ற
  “கருளப்புட்கொடி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘திருவனந்தாழ்வான்
  மேலே’ என்றது, “அரவின் அணை” என்றதனைத் திருவுள்ளம்பற்றி, “ஆறு
  எனக்கு” என்பது போன்றவைகளைத் திருவுள்ளம்பற்றிப் ‘புகலற்று’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. என்கொண்டு - என்ன சம்பந்தங்கொண்டு, வடிம்பிடப் பார்த்தல் - விரைந்து
  நிர்ப்பந்தித்தல்.