|
New Page 1
செய்கையாவது, “அன்று இவ்வுலகம்
அளந்தாய் அடிபோற்றி” என்னுமாறு போலே, அந்த நடை அழகுக்கு மங்களாசாசனம் செய்தல்.
(6)
515
வந்தருளிஎன் னெஞ்சிடம்
கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத்தாய் தந்தையே!
முழுஏழுலகும் உண்டாய்!
செந்தொ ழிலவர் வேத
வேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
அந்தமில் புகழாய்!
அடியேனை அகற்றேலே.
பொ-ரை :- பரமபதத்தில் நின்றும் வந்து என் நெஞ்சினை
இடமாகக் கொண்ட வானவர் கொழுந்தே! இந்த உலகங்கட்கு ஒப்பற்ற பழைமையான தாயும் தந்தையுமானவனே!
எல்லா உலகங்களையும் பிரளயகாலத்தில் உண்டவனே! பயன் கருதாத கைங்கர்யத்தையுடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கிற சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற எல்லை
இல்லாத புகழையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டுள்ள அடியேனை நீக்காமல் இருக்க வேண்டும்.
வி-கு :-
வந்தருளி: ஒருசொல், வந்தருளி கொண்ட கொழுந்தே! என்க. அகற்றேல்: எதிர்மறை.
ஈடு :- ஏழாம்
பாட்டு. 1“அடியேன் தொழ வந்தருளே” என்கிற சொல்லோடே வரக் காணாமையாலே
‘உபேக்ஷித்தானோ’ என்று அஞ்சி, என்னை அகற்றாது ஒழிய வேண்டும் என்கிறார்.
‘வந்தருளி என் நெஞ்சிடம்
கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, 2“பட்டர், ஸ்ரீ புஷ்பயாகம்
_____________________________________________________
1. மேலே ‘வர வேண்டும்’
என்று பிரார்த்தித்தவர், முகங்காட்டாதவனைச்
சொல்லுமாறு போலே “அகற்றேலே” என்பான் என்?
என்ன, அதற்கு
விடை கூறுமுகத்தால் ‘அடியேன்’ என்று தொடங்கி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2.
“வந்தருளி” என்று ஈடுபாடு தோன்ற அருளிச்செய்தற்குச் சம்வாதம்
காட்டுகிறார் ‘பட்டர்’ என்று
தொடங்கி. புஷ்பயாகம் என்பது, ஒரு யாக
விசேடம். பிரஹ்மோத்சவத்தின் முடிவில் (பத்தாவது உத்சவம்)
பெருமாளுக்கு எதிரில் மண்டலங்கள் போட்டு, அதில், மற்றைப்
பொருள்களையும் நெருப்பையும் கலவாமல்,
புஷ்பங்களையே கொண்டு
அர்ச்சனை செய்வது போன்று யாகம் செய்வது என்பர். இது,
திருவரங்கத்தில்
பிரஹ்மோத்சவத்தில் இன்றும் செய்யப்பட்டு வருகின்றது.
|